திருவனந்தபுரம்: கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கோடியேரி பாலகிருஷ்ணன் (68). கடந்த வி.எஸ். அச்சுதானந்தன் அமைச்சரவையில் உள்துறை, சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தார். 3 முறை மாநில சிபிஎம் செயலாளராகவும், பொலிட் பீரோ உறுப்பினராகவும் இருந்தார்.
இந்தநிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 1ம் தேதி இரவு காலமானார்.
இந்த தகவல் அறிந்ததும் மருத்துவமனையில் வைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோடியேரி பாலகிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு உடல் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
தலச்சேரியில் உள்ள டவுன் ஹாலில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு முதல்வர் பினராய் விஜயன், மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் உள்பட ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். இன்று கோடியேரி பாலகிருஷ்ணனின் உடல் கண்ணூர் மாவட்ட சிபிஎம் அலுவலகத்தில் வைக்கப்பட்டது.
அவது உடலுக்கு கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் உள்பட ஆயிரக்கணக்கானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மாலை 3.30 மணி அளவில் கண்ணூர் பையாம்பலம் கடற்கரை மயானத்தில் முழு போலீஸ் மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படுகிறது.