சென்னை: திருப்பதியில் பிரம்மோற்சவ விழா களைகட்டியுள்ள நிலையில், பிரமோற்வத்திற்காக 427 பெருமாளின் திருமுகங்களுடன் கூடிய பட்டு சேலையை காஞ்சிபுரத்தை சேர்ந்த குமரவேலு – கலையரசி தம்பதியினர் தயாரித்து அசத்தி உள்ளனர். சென்னையை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் கேட்டதற்கிணங்க, இந்த பட்டுச்சேலையை சுமார் 192 மணி நேரத்தில் நெசவு செய்து சாதனை படைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் 27ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. எங்கு நோக்கிலும், பக்தர்களின் கோவிந்தா…கோவிந்தா என்று சொல்லும் கோஷமே கேட்டுக்கொண்டிருக்கிறது. லட்சணக்கனான பக்தர்கள், தங்களது வேண்டுதலை நிறைவேற்றிய கோரியும், வேண்டுதலை நிறைவேறிய பக்தர்கள் தங்களது காணிக்கையாக பணம், வெள்ளி, தங்கம் என செலுத்தி ஏழுமலையானை தரிசித்து ஆசி பெற்று வருகிறார்கள்.
திருமலையில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின்போது பெருமாளுக்கு வாடிக்கையாளரால் பட்டுசேலை வழங்குவது வழக்கம். இந்த நிலையில், சென்னை சேர்ந்த நபர் ஒருவர் திருப்பதி பிரம்மோற்சவத்திற்காக பட்டுசேலை காணிக்கையாக வழங்கும் வகையில், வித்தியாசமான முறையில் 427 பெருமாள் திருமுருகங்களுடன் நெசவு செய்ய காஞ்சிபுரத்தை சேர்ந்த நெசவு தம்பதிகளிடம் கோரியிருந்தார்.
இதையடுத்து, அவர்கள், 8 நாட்கள் விரதம் இருந்து இரவு பகல் பாராமல் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பட்டுசேலையை நெசவு செய்து அசத்தியுள்ளனர். இந்த அழகிய பட்டுச்சேலையில், கண்ணை கவரும் கலைநயத்தில், பெருமாளின் 427 திருமுகங்கள் மற்றும் பெருமாள் அனந்த சயனத்தில் இருக்கும் வகையிலான படமும் பட்டு நூலினால் நெய்யப்பட்டு உள்ளது. இது காண்போரை பக்தி பவசம் செய்யும் வகையில் நுன்னிய வேலைப்பாடுகளுடன் நெசவு செய்யப்பட்டு உள்ளது. பெருமாளின் முகங்களையும், முந்தானையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பெருமாள் லட்சுமி தேவியை வடிவமைத்துள்ளனர். இந்த சேலையை செய்ய அவர்கள் சுமார் 192 மணிநேரம் எடுத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் 427 பெருமாளின் திருமுருகங்களும் 27 ஜோடி யானைகள் உருவமும், ஆதிசேஷன் மீது அரங்கநாதரும் மகாலட்சுமியும் அமர்ந்திருப்பது போல் உருவம் பதித்த பட்டுசேலை ஒன்றை காஞ்சிபுரத்தை சேர்ந்த தம்பதியினர் விரதம் இருந்து நெசவு செய்துள்ளனர்.
இந்த நெசவு சேலையை நெய்த தம்பதியினர் பெயர் குமரவேலு கலையரசி. இவர்கள் காஞ்சிபுரத்தில் விளக்கொளி பெருமாள் கோவில் தோப்புத் தெருவில் வசித்து வருகிறார். பட்டுச்சேலை வடிவமைப்பு தொழில் செய்து வரும் இவர்கள், வாடிக்கையாளர்கள் விரும்பும் உருவங்களை பட்டு சேலையில் வடிவமைத்து கைத்தறியில் நெசவு செய்து தயாரித்து வழங்கி வருகின்றனர். அதுபோலவே தற்போது ஏழுமலையானுக்கு செலுத்தும் வகையில், பெருமாளின் திருமுகத்துடன் பட்டுச்சேலை தயாரித்துள்ளனர். இந்த பட்டுசேலை தற்போது உபயதாரரால், திருப்பதி ஏழுமலையானுக்கு செலுத்தபடுகிறது.