செங்கல்பட்டு ரயில் நிலையம். சென்னை கடற்கரை வரை செல்லும் ரயில், நடைபாதையில் வந்து நின்றது. கூட்டத்துக்குள் நுழைந்து பெண்கள் பெட்டியில் ஏறினேன். நான் ஏறிய அடுத்த சிலநொடிகளில் ரயில் மெள்ள நகர்ந்தது. காலியாக இருக்கும் ஜன்னல் இருக்கையை நோக்கி மனம் பாய்ந்தது. ரயில் பெட்டியின் இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்த பெண், எதிரெதிர் சீட்டில் கால் நீட்டி இரு ஜன்னல் இருக்கைகளை ஆக்கிரமித்திருந்தார். அந்த இருக்கைக்கு அருகில் சென்றதும், அவரே கால்களைக் கீழே இறக்கி நான் அமர இடம் கொடுத்தார். அன்றைய பயணமும் ஜன்னல் இருக்கையுடன் தொடங்கியது. தொடர் வேலைகளில் அரைமணி நேரமாக என்னுடைய போனுக்கு நான் ஓய்வு கொடுத்திருந்தது நினைவுக்கு வர, கைப்பையில் இருந்து போனை எடுத்து, கால் ஹிஸ்ட்ரி செக் செய்தேன். அம்மாவிடம் இருந்து மூன்று மிஸ்டு கால்கள்… ஏதோ ஒரு சலிப்பில், அம்மாவை மீண்டும் அழைக்கவில்லை. போனை மீண்டும் பையில் வைத்துக் கொண்டேன்.
அந்தப் பெட்டியின் கடைசி சீட்டில் அமர்ந்திருந்த பெண், பைகளில் அடுக்கியிருந்த டப்பாக்களை விரித்து, ஹேர் கிளிப்கள், பொட்டுகள் போன்ற ஃபேன்ஸி பொருள்களை விற்கத் தொடங்கினார். சில நூறு ரூபாய்க்கு வியாபாரம் நடந்தது. ரயில் பெட்டியின் நுழைவு வாயிலில் கால்களை நீட்டி அமர்ந்திருந்த 75 வயது மதிக்கத்தக்க ஒரு பாட்டி, ஃபேன்ஸி பொருள்கள் விற்கும் பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்தார்.
அந்தப் பெண் வியாபாரத்தை முடித்து அடுத்த பெட்டிக்கு நகர்ந்ததும், தன் அருகில் வைத்திருந்த பையை தன்னுடைய இடது மணிக்கட்டில் நுழைத்துக் கொண்டார். எழுந்து நின்று சேலையைச் சரி செய்தார். கடலை மிட்டாய், இஞ்சி மிட்டாய் சரத்தை இடது கையில் தொங்கவிட்டுக் கொண்டு, “இஞ்சி மிட்டே, கடல மிட்டே” என்று தன் வியாபாரத்தைத் தொடங்கினார்.
ரயிலில் இருந்த ஒரு குழந்தை, தன் அம்மாவைப் பார்த்து, “அது வேணும்” என்று கடலை மிட்டாயை சுட்டிக் காட்டியது. அதற்கு அந்த அம்மா, சற்று எரிச்சல் கலந்த குரலில், “அதெல்லாம் வேணாம், சும்மா இருக்க மாட்டியா? இதெல்லாம் ஹைஜீனிக்கா இருக்காது” என்று குழந்தையை அதட்டினார்.
“காசு வேணாம்மா குழந்தை சாப்பிடட்டும். என் பேத்தி மாதிரி இருக்கா” என பாட்டி சொல்ல, “ஆயா, அமைதியா போ. என் புள்ளைக்கு என்ன வாங்கித் தரணும், தரக்கூடாதுனு எனக்குத் தெரியும்” என்று அந்த அம்மா குரல் உயர்த்திப் பேசினார். வார்த்தைகளை அடக்கி, குழந்தையைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே அந்த இடத்தில் இருந்து பாட்டி நகர்ந்தார்.
அந்த ரயில் பெட்டியின் கடைசி வரை சென்றும் ஐந்து ரூபாய்க்குக்கூடப் பாட்டிக்கு வியாபாரம் ஆகவில்லை. மீண்டும் ரயிலின் வாசலுக்கு நேராக வந்து அமர்ந்து கால்களை நீட்டிக் கொண்டார். பைகளில் இருந்த கடலை மிட்டாய் பாக்கெட்டுகளை மடியில் போட்டு ஒவ்வொன்றாக எண்ண ஆரம்பித்தார். என்னிடம் இருந்த 100 ரூபாயை எடுத்துக்கொண்டு பாட்டியிடம் சென்றேன். `பாட்டி, கடலை மிட்டாய் பாக்கெட் எவ்வளவு’ என்றேன். “அஞ்சு ரூவா தாயீ” என்று ஒரு கடலை மிட்டாய் பாக்கெட்டை நீட்டினார்.
கையில் வாங்கிக்கொண்டு, `பாட்டி ஒரு நாளைக்கு எத்தனை பாக்கெட் வியாபாரம் ஆகும்’ என்றேன். “நூத்தம்பது பாக்கெட் போகும்” என்றவரிடம், `நூறு ரூபாய்க்குக் கடலை மிட்டாய் குடுங்க பாட்டி’ என்றேன். பாட்டிக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. “நிஜமாவா தாயீ” என்றார். `ஆமா பாட்டி’ என்று நான் தலையசைக்க. பையிலிருந்த கடலை மிட்டாய் பாக்கெட்டை மடியில் கொட்டி 20 பாக்கெட்டுகளை எண்ணி, ஒரு பேப்பரில் சுற்றி நீட்டினார். அதை வாங்கி என் கைப்பைக்குள் வைத்துக் கொண்டேன்.
மீண்டும் இருக்கைக்குச் செல்ல மனமில்லை. பாட்டிக்கு அருகில் அமர்ந்துகொண்டேன். பாட்டி தலை குனிந்து சில்லறைகளை எண்ணிக்கொண்டு இருந்தார். `பாட்டிக்கு எந்த ஊரு’ என்று கேட்டேன்.“சொந்த ஊரு சேலம். கட்டிக் கொடுத்த ஊரு ஊரப்பாக்கம்” என்றார். `எதுக்கு பாட்டி இந்த வயசுல இவ்வளவு கஷ்டப்பட்டு பையை சுமந்து வியாபாரம் பண்றீங்க’ என்றேன்.
வயித்தைத் தடவிக் காண்பித்து, “சாப்பிடணும்ல தாயீ ” என்றார். `உங்களுக்கு பசங்க இல்லையா பாட்டி’ என்றேன். “எல்லாரும் இருக்காங்க. ஆனா, யாரும் பாத்துக்கல. கஞ்சி ஊத்தல” என சொல்லும்போதே பாட்டிக்கு கண்கள் குளமாகின. சிறிது நேர அமைதிக்குப் பின். `நீ எங்கத்தா போணும்’ பாட்டியிடம் இருந்து ஒரு கேள்வி வந்தது. `எக்மோர் போகணும் பாட்டி’ என்று சொல்லியபடியே, `நீங்க எங்க வரைக்கும் வியாபாரம் பண்ணுவீங்க’ என்றேன்.
“தாம்பரம் வரை வியாபாரம். அப்புறம் அடுத்த ரயில் ஏறி, செங்கல்பட்டு வரை. இப்படி ஒரு நாளைக்கு பத்து முறை அங்கிட்டும், இங்கிட்டும் போயிட்டு வந்தாதான் நூத்தம்பது பாக்கெட் விக்கும். ஒரு பாக்கெட்டுக்கு ஒரு ரூபா லாபம் கிடைக்கும்” என்றவரிடம், `உங்க பசங்களுக்கு நீங்க ரயில்ல வியாபாரம் பண்றீங்கனு தெரியுமா பாட்டி’ என்றேன். “அதெல்லாம் நல்லா தெரியும். ஆனா, சோறு போடுறேன் வா”னு கூப்பிட மாட்டாங்க.
“எனக்கு மூணு பசங்க. `மூணு ஆம்பளப் புள்ளைங்கள பெத்துருக்க. நீ குடுத்து வெச்சவ’னு எல்லாரும் சொல்லுவாங்க. வீட்டுக்காரர் மெக்கானிக் வேலை பார்த்துட்டு இருந்தாரு. நான் சித்தாள் வேலைக்குப் போயிட்டு இருந்தேன். கஷ்டப்பட்டாவது மூணு பிள்ளைங்களையும் படிக்க வைக்கணும்னு நினைச்சேன். ஆனா, அதுங்க படிக்கல. எட்டாவது, பத்தாவதோட நிறுத்திக்கிட்டாங்க. சின்னவன் மட்டும் பாலிடெக்னிக் படிச்சான். என் தாலிய அடமானம் வெச்சுதான் கடைசி வருஷம் ஃபீஸ் கட்டுனேன்.
மூணு பேரும் கூலி வேலைக்குத்தான் போறாங்க. சொந்தத்திலேயே பொண்ணு பார்த்து மூணு பேருக்கும் கல்யாணம் பண்ணி வெச்சேன். கல்யாணம் ஆகி முதல் மூணு வருஷம், பேரப்பிள்ளைங்க பொறந்து அதுங்க வளர்ற வரை எல்லாரும் ஒரே வீட்லதான் இருந்தோம். அப்புறம், பெத்தவங்க உதவி அவங்களுக்குத் தேவைப்படல. பொண்டாட்டி பேச்சைக் கேட்டுக்கிட்டு மூணு பேரும் தனித்தனியா போயிட்டாங்க. அந்த நேரத்துல எங்க வீட்டுக்காரருக்கும் கை – காலு வராமப் போச்சு.
யாரும் உதவிக்கு வரலம்மா. வாராவாரம் ஆட்டோ பிடிச்சு நாந்தான் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போவேன். வருமானம் இல்ல. மருத்துவ செலவுக்கு காசு இல்ல. மகன்களுக்கு போன் பண்ணி தகவலைச் சொன்னேன். வந்து எட்டிப் பார்த்துட்டு பதிலே சொல்லாமப் போயிட்டாங்க. எங்க பேரன், பேத்திக நம்மகிட்ட ஒட்டிக்கிட்டா, நாம அவங்க வீட்டுக்குப் போயி இருந்துருவோங்கிற பயத்துல, பேரப்புள்ளைகளை எங்க கண்ணுல காட்டுறது கிடையாது. அதான் எந்த புள்ளைய பார்த்தாலும், எனக்கு என் பேரன், பேத்தி ஞாபகம் வந்துருது” என்ற பாட்டியின் கண்கள் தூரத்தில் விளையாடிய பெண் குழந்தையின் மீது நிலை குத்தி நின்றன.
“எங்க ஊருக்கார பொண்ணு இதே ரயிலுல கொய்யாப்பழம் விக்கும். அதான் அதுகூட நானும் வியாபாரத்துக்கு வந்துருவேன். அதுவே எனக்கும் சேர்த்து தாம்பரத்தில் கடலை மிட்டாய் வாங்கிட்டு வந்துரும். செலவெல்லாம் போக ஒரு நாளைக்கு நூறு, நூத்தம்பது ரூபா கிடைக்கும். ரேஷனை நம்பி சாப்பாட்டு முறைய கழிச்சாலும், மருந்து மாத்திரை வாங்க காசு வேணும்ல தாயீ. எனக்கு கல்யாணம் ஆனதுல இருந்து என்னையும், புள்ளைங் களையும் தாங்குன மனுஷன் நடக்க முடியாம கெடக்காக. நான் வியாபாரத்துக்கு வர்றதுல அவகளுக்கு அவ்வளவு மனசு கஷ்டம். என்ன செய்ய… எல்லாம் விதி. ஒரு பொட்டப் புள்ள பொறக்காம போச்சேனு இப்போ வருத்தப்படுறேன்” என்றவர், பைகளைத் தூக்கிக்கொண்டு கிளம்பத் தயாரானார்.
சிறிய தயக்கத்துடன், “பாட்டி , உங்களையும் ஐயாவையும் முதியோர் இல்லத்துல சேர்த்துவிடட்டுமா’’ என்றேன். லேசாக சிரித்து, “முப்பது வருஷம் புள்ளைகளுக்காக வாழ்ந்தோம். நல்ல துணிமணிகூட நாங்க உடுத்துனது கிடையாது. இப்போ கிடைக்குற இந்த வருமானத்துல நாங்க சந்தோஷமாதான் தாயீ இருக்கோம். என் உசுரு இருக்கவரை அவகள நல்லா பார்த்துப்பேன். அவகள தனியா தவிக்க விட்டுட்டு எனக்கு சாவு முதல்ல வந்துரக் கூடாதுனு அந்த மாரியாத்தவ வேண்டிக்கிட்டு இருக்கேன். உசுரு இருக்க வரைக்கும் உழைச்சு சாப்பிடுறோம்” என்றவர், “அவகளுக்கு உளுந்து வடை பிடிக்கும் டெய்லி வாங்கிட்டுப் போவேன்” என்று கூறிக்கொண்டே பத்து ரூபாய் நோட்டை எடுத்து தனியாக முந்தானையில் முடிந்துகொண்டு, பைகளைத் தூக்கிக்கொண்டு ரயிலிருந்து இறங்கினார்.
பாட்டியின் பேச்சு, குற்ற உணர்வை நோக்கித் தள்ளியது. அம்மா போன் செய்திருந்தது நினைவுக்கு வந்தது. அம்மாவுக்கு கால் செய்தேன். “லன்ச் பாக்ஸை விட்டுட்டுப் போயிட்ட . அதுக்காக சாப்பிடாம இருக்காத. கேன்ட்டீன்ல வாங்கி சாப்பிடுனு சொல்லத்தான் கால் பண்ணேன்” என்று அம்மா சொல்ல, சில நேரங்களில் பெற்றோரின் அன்பை நாம் எளிதாக உதாசீனப் படுத்துகிறோம் என்பது மனசை நெருடியது. மீண்டும் அம்மாவுக்கு போன் செய்து, `சாப்டீங்களாம்மா?’ என்றேன். `என்ன, இதெல்லாம் புதுசா இருக்கு’ என்ற அம்மாவின் குரலில் ஏதோ ஒரு சின்ன மகிழ்ச்சி. அந்த சந்தோஷத்தை நாம் தேடி ஓடும் பணம் எப்போதும் பெற்றோர்களுக்குக் கொடுக்காது. அரவணைப்பால், அன்பால் நன்றியைச் செலுத்துவோம்.
அன்பு சூழ் உலகிது!