புதுடெல்லி: இந்திய வான் எல்லையில் பறந்து கொண்டிருந்த ஈரான் பயணிகள் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. ஈரான் தலைநகர் டெக்ரானில் இருந்து சீனாவின் குவாங்சூ நோக்கி மஹான் நிறுவனத்தின் டபிள்யூ581 பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது. இந்திய வான் எல்லையை கடக்கும் போது, அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் அழைப்பு வந்தது. ஈரான் விமானி உடனடியாக இந்த தகவலை டெல்லி விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்தார். உடனே, இந்திய விமானப்படைக்கு சொந்தமான 2 எஸ்யு-30 எம்கேஐ ரக போர் விமானங்கள் பஞ்சாப் மற்றும் ஜோத்பூர் விமானதளங்களில் இருந்து புறப்பட்டு சென்றன.
அவை மிரட்டல் விடுக்கபட்ட விமானத்தின் அருகே, அதன் பாதுகாப்பை உறுதிசெய்ய குறிப்பிட்ட தூரத்தில் பறந்தபடி கண்காணித்தன. ஈரான் விமானத்தை ஜெய்ப்பூர் அல்லது சண்டிகரில் தரையிறங்குமாறு விமானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர்கள் அதற்கு மறுத்துவிட்டனர். இதனிடையே, டெக்ரானில் இருந்து வெடிகுண்டு மிரட்டலை பொருட்படுத்தாமல் நேரடியாக இறுதி இலக்கை நோக்கி செல்லும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த விமானம் குவாங்சூ நோக்கி புறப்பட்டு சென்றது. இந்திய வான் எல்லையில் பறந்த போது வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.