வெந்தயம், வெங்காயம், வேப்பிலை, மருதாணி: பொடுகுத் தொல்லையை போக்க இயற்கையான 10 வழிகள்!

பொடுகு… இது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடிய ஒன்று. அதிலும் குறிப்பாக, இளம் வயதினருக்கு பல நேரங்களில் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது இந்தப் பொடுகுத் தொல்லை.

பொடுகுதானே என்று அலட்சியமாகவும் இருக்க முடியாது. இதைக் கண்டுகொள்ளாமல்விட்டால், முடி உதிர்வு ஏற்படலாம். அதோடு ஒருசில தோல் வியாதிகள் உருவாகவும் இது வழிவகுக்கும். முகத்தில் பருக்கள் உருவாகலாம்; கழுத்திலும், காதின் பின்புறத்திலும் தோல் தொடர்பான நோய்கள் ஏற்படலாம்.

பொடுகுத் தொல்லை (Representational Image)

பொடுகு ஏற்பட என்ன காரணம்?

வறண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிரித் தொற்றுகள், மனஅழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம், தலையைச் சுத்தமாகப் பராமரிக்காதது போன்றவை பொடுகுப் பிரச்னை உருவாக முக்கியக் காரணங்கள்.

`பொடுகுப் பிரச்னையைப் போக்கலாம்’ என வெளியாகும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் ஏராளம். அவற்றை நம்பி, கண்ட கண்ட ஷாம்பூகளை, அதிகப் பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்துகிறோம்.

ஆனால், `இயற்கையாக மரம், செடி, கொடிகளிலிருந்து கிடைக்கக் கூடியவை, நம் வீட்டுச் சமையல் அறையில் இருக்கும் பொருள்களும்கூட பொடுகுப் பிரச்னைக்கு நல்ல தீர்வு தரக்கூடியவை’ என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள். அப்படி பொடுகை விரட்ட உதவும் எளிதான 10 வழிகள் இங்கே….

வெந்தயம்… வீரியம்!

இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை ஊறவைக்கவும். மறுநாள் அதை அரைத்துக்கொள்ளவும். இதை தலையில் தேய்த்து, அரை மணி நேரம் ஊறவைத்து தலைக்குக் குளிக்கவும். இது உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; முடி வளர்ச்சிக்கு உதவும்.

ஆரஞ்சு தோல்… அட்டகாசம்!

ஆரஞ்சு தோல்களை நன்கு அரைத்துக்கொள்ளவும். இதனுடன் சிறிது எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்துக்கொள்ளவும். இதைத் தலையில் தேய்த்து, 30 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு குளித்தால், பொடுகுத் தொல்லை நீங்கும்.

வெங்காயம் காக்கும்!

வெங்காயத்தை அரைத்து தலையில் தடவி, 30 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும். பிறகு தலைக்குக் குளித்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

வெங்காயம்

தயிர் தேய்த்துக் குளியல்!

தயிரைத் தலையில் நன்றாகத் தேய்த்துக்கொள்ள வேண்டும். சுமார் ஒரு மணி நேரம் கழித்து, சிறிது ஷாம்பூ போட்டுக் குளிக்கலாம். தயிர், உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; முடிக்கு பளபளப்பையும் தரும். சைனஸ், ஒற்றைத் தலைவலி வரும் பிரச்னை இருப்பவர்கள், இதைத் தவிர்க்கவும்.

பேக்கிங் சோடா பேக்!

ஈரமான தலைமுடியில் சிறிது பேக்கிங் சோடாவைத் தேய்க்கவும். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு தலையை அலசவும். பேக்கிங் சோடா பொடுகுக்கு மிகச் சிறந்த நிவாரணி. இது, தலையில் உள்ள இறந்த செல்கள் நீங்கவும், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடவும் உதவும். பேக்கிங் சோடாவை அதிக நேரம் தலையில் வைத்து இருந்தால் தலைமுடி வறண்டு விடும்… கவனம்!

தேங்காய் எண்ணெய் – எலுமிச்சைச் சாறு மசாஜ்!

எலுமிச்சைச் சாறு, தேங்காய் எண்ணெய் இரண்டிலும் தலா இரண்டு டேபிள்ஸ்பூன் எடுத்து நன்றாகக் கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை தலைமுடியில் மசாஜ் செய்வதுபோலத் தேய்த்து, 20 நிமிடங்கள் வரை ஊறவைக்க வேண்டும். பிறகு ஷாம்பூ தேய்த்து, தலையை அலச வேண்டும். தேங்காய் எண்ணெய், முடிக்கு ஊட்டமளிக்கும். எலுமிச்சைச் சாறு பொடுகுத் தொல்லையை நீக்கி, முடி வளர்ச்சிக்கு உதவும்.

ஆப்பிள் சிடர் வினிகர்… பொடுகு மருந்து!

ஆப்பிள் சிடர் வினிகர் பெரிய கடைகளில் கிடைக்கும். சிறிது ஆப்பிள் சிடர் வினிகரை எடுத்து, அதனுடன் சம அளவு தண்ணீர் சேர்த்துக் கலந்துகொள்ள வேண்டும். இதை தலையில் தேய்த்து ஊறவைக்க வேண்டும். இருபது நிமிடங்கள் கழித்து தலையை அலசிவிட வேண்டும். இது பொடுகுக்கு சிறந்த மருந்து; முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும்.

வேப்பிலை கசப்பு… பாக்டீரியாவுக்கு எதிரி!

கைப்பிடி வேப்பிலைகளை பேஸ்ட்போல அரைத்துக்கொள்ளவும். இதைத் தலையில் தேய்த்து ஊறவைத்து, 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இதன் கசப்பு தன்மை, தலையில் உள்ள பாக்டீரியா போன்ற தலைமுடிக்குத் தீங்கிழைக்கும் நுண்ணியிரிகளை அழித்துவிடும்.

கூந்தல் ஊட்டத்துக்கு டீ ட்ரீ எண்ணெய் (Tea Tree Oil)

டீ ட்ரீ எண்ணெய் பொடுகை உருவாக்கக்கூடிய கிருமிகளை எதிர்த்து போராடக்கூடியது. கூந்தலுக்கு ஊட்டச்சத்தை அளித்து, முடி உதிர்வையும் தவிர்க்க உதவும். டீ ட்ரீ எண்ணெயைச் சில துளிகள் எடுத்து, தலை முழுக்கத் தடவி, ஐந்து நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பிறகு ஷாம்பூ போட்டுக் குளிக்கலாம்.

மருதாணி

மருதாணி இலை மகிமை!

கைப்பிடி மருதாணி இலைகளை அரைத்து, அதில் சிறிது தயிர் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்துக்கொள்ளவும். இதைத் தலைமுடியில் நன்றாகத் தேய்க்கவும். இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் கூந்தலை அலசி, குளிக்கலாம். இதனால் பொடுகுத் தொல்லை நீங்கும்; நரை முடி பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும். சைனஸ், ஒற்றைத் தலைவலி, சளி பிடிக்கும் பிரச்னை ஆகியோர் தவிர்க்கவும்.

குறிப்பு: பராமரிப்பின்மை, வியர்வை, அழுக்கு போன்ற வெளிப்புற காரணங்களால் ஏற்படும் பொடுகுத் தொல்லைக்கு இந்த வீட்டு வைத்தியம் கைக்கொடுக்கும். அதுவே, ஹார்மோன் பிரச்னை உள்ளிட்ட உடல்நிலைக் காரணங்களால் ஏற்படும் பொடுகுத் தொல்லைக்குத் தீர்வு பெற மருத்துவ ஆலோசனை அவசியம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.