திருவனந்தபுரம்,
கேரளாவில் சமீபத்தில் நடந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாட்டில் கலந்து கொள்ள திருவனந்தபுரம் வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், திருவனந்தபுரம் தமிழ் சங்க பொதுச்செயலாளர் சு.முருகன், செயலாளர் சி.கண்ணன் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
சங்க கால தமிழ் புலவர்களில் 50-க்கும் அதிகமானோர் சேர நாட்டைச் (தற்போதைய கேரளம்) சேர்ந்தவர்கள். சிலப்பதிகாரம் தந்த இளங்கோவடிகளும் சேர நாட்டினர் தான்.
எனவே, தமிழ் இலக்கியத்துக்கு பெரும் நன்கொடையாகிய சிலப்பதிகாரத்தை படைத்த இளங்கோவடிகளின் பெயரில் கேரளத்தில் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் ஓர் இருக்கை அமைய வேண்டும் என்பது கேரள வாழ் தமிழர்களின் நீண்டகால ஆசை. திராவிட மொழிகளின், குறிப்பாக தமிழ், மலையாள மொழிகளின் ஒப்பாய்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இந்த இருக்கை அமைய வேண்டும்.
இதுகுறித்து திருவனந்தபுரம் தமிழ் சங்கத்தின் சார்பில் கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். கேரள அரசின் ஆணைப்படி கேரள பல்கலைக்கழகம் இந்த கோரிக்கையை ஆய்வு செய்து, ரூ.2.5 கோடி நிரந்தர வைப்பு தொகையாக வழங்கினால் உடனடியாக இளங்கோவடிகள் பெயரில் இருக்கை அமைக்கலாம் என கடிதம் அனுப்பியுள்ளது. கேரள மாநிலத்தில் தமிழ் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழக முதல்-அமைச்சர் இந்த கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் ஆசிரியர் மனோன்மணியம் சுந்தரனாருக்கு அவர் வாழ்ந்த திருவனந்தபுரம் நகரில் மணி மண்டபம் அமைக்க தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். கேரள அரசிடம் நிலம் ஒதுக்கக் கேட்டு, அந்த நிலத்தில் தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் அமைத்தால் சிறப்பாக இருக்கும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.