கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. பாக்ஸ் ஆஃபீஸில் இப்போது கோலோச்சிக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் 200 கோடியை கடந்துவிட்டதாக லைகா புரொடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் நாட்டில் மட்டும்மல்லாது இந்தியா முழுவதும், வெளிநாடுகளிலும் பொன்னியின் செல்வன் படத்திற்கு அமோக வரவேற்பு இருக்கிறது. இதனையொட்டி படத்தின் தயாரிப்பாளரான லைகா புரொடக்ஷன்ஸ் இயக்குநர் மணிரத்னத்தை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்திபன் ஆகியோருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் இளம் நந்தினியாக வரும் சாரா சினிமா வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளார். இவர் 2011 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வ திருமகள் படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார். அதன்பிறகு சைவம், விழித்திரு, சில்லுக்கருப்பட்டி மற்றும் விழித்திரு உள்ளிட்ட படங்களில் நடித்த அவருக்கு பல மொழி படங்களிலும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது. குழந்தை நட்சத்திரம் என்பதால் இந்தி, மலையாளம், தெலுங்கு என ஒரு ரவுண்ட் வந்தார் சாரா. இப்போது பொன்னியின் செல்வனில் இளம் நந்தினியாக நடித்து அசத்தியிருக்கிறார்.
அவருடைய கதாப்பாத்திரம் சிறியது என்றாலும், ரசிகர்கள் கவனிக்க தவறவில்லை. குழந்தையாக நடித்த சாரா, இப்போது டீன் ஏஜ் கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். சிலர், தெய்வ திருமகளில் நடித்த சாரா-வா? இது வியப்போடு கேள்வி எழுப்பியுள்ளனர். அதேநேரத்தில், முக்கியமான கதாப்பாத்திரத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மணிரத்னத்துக்கு சாரா நன்றி தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பு வந்தபோது தவறவிடக்கூடாது என்பதற்காக உடனே ஓகே சொல்லிவிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் சாராவும், விரைவில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறுவதற்கான அத்தனை அம்சங்களும் இருப்பதாக நெட்டிசன்கள் அவருக்கு ஸ்பெஷல் வாழ்த்தை அனுப்பி வருகின்றனர்.