இந்தூர்,
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு ஆட்டங்களில் வரிசையாக தோற்ற தென்ஆப்பிரிக்கா தொடரையும் இழந்து விட்டது. இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்றுநடக்கிறது.
தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 106 ரன்களில் சுருட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்த இந்தியா கவுகாத்தியில் நடந்த 2-வது ஆட்டத்தில் 237 ரன்கள் குவித்த போதிலும் போராடி தான் வெற்றி பெற முடிந்தது. டேவிட் மில்லரின் தடாலடியான சதத்தால் தென்ஆப்பிரிக்கா 221 ரன்கள் வரை நெருங்கி வந்து அச்சுறுத்தியது. அந்த அளவுக்கு இந்தியாவின் இறுதிகட்ட பந்து வீச்சு சொதப்பலாக இருந்தது.
இது குறித்து கேப்டன் ரோகித் சர்மா, ‘கடந்த 5-6 ஆட்டங்களில் எங்களது கடைசி கட்ட பந்துவீச்சு சரியில்லை. ஆனால் ஆட்டத்தை தீர்மானிக்கும் இந்த பகுதியில் பந்து வீசுவது எப்போதும் சவாலானது. எதிரணி பந்து வீச்சாளர்களை நாமும் இதையே (அடித்து நொறுக்குவது) செய்கிறோம். அதனால் இது பற்றி கவலைப்பட தேவையில்லை. ஆனால் நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும் ‘ என்று தெரிவித்தார்.
தொடரை வென்று விட்டதால் இனி கடைசி ஆட்டத்தில் நெருக்கடி இல்லை. ஒரு சில மாற்றங்களை செய்ய இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி துணை கேப்டன் லோகேஷ் ராகுல், முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஸ்ரேயாஸ் அய்யர், ஆல்-ரவுண்டர் ஷபாஸ் அகமது ஆகியோருக்கு களம் காண வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. சூப்பர் பார்மில் உள்ள சூர்யகுமார் யாதவ் இந்த ஆட்டத்திலும் ஜொலிப்பாரா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக இந்திய அணி விளையாடும் கடைசி சர்வதேச 20 ஓவர் போட்டி இது தான். எனவே வெற்றியுடன் தொடரை நிறைவு செய்வதில் இந்திய வீரர்கள் தீவிரம் காட்டுவார்கள்.
தென்ஆப்பிரிக்க அணியை எடுத்துக் கொண்டால் கடந்த ஆட்டத்தில் டேவிட் மில்லர், குயின்டான் டி காக் ஆகியோர் பேட்டிங்கில் கலக்கினர். ஆனால் கேப்டன் பவுமாவின் பேட்டிங் தான் மெச்சும்படி இல்லை. இரு ஆட்டங்களிலும் ‘டக்-அவுட்’ ஆகி தடுமாறும் அவர் இன்றைய ஆட்டத்திலும் சொதப்பினால் அவரது இடத்துக்கு ஆபத்து வந்து விடும் என்பதில் சந்தேகமில்லை.
இதே போல் பந்து வீச்சாளர்கள் ரபடா, அன்ரிச் நோர்டியா ஆகியோரும் பார்முக்கு திரும்ப வேண்டிய அழுத்தத்தில் உள்ளனர். மொத்தத்தில் ஆறுதல் வெற்றிக்காக களம் இறங்கும் இவர்களுக்கும் இது தான், உலக கோப்பை போட்டிக்கு முந்தைய கடைசி 20 ஓவர் போட்டியாகும்.