சென்னை: தமிழகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால், பிறப்பிட சான்றிதழ் வழங்க மறுத்ததை எதிர்த்து, வழக்கு தொடர்ந்த பெண் டாக்டரை, முதுநிலை மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்கும்படி, புதுச்சேரி ‘சென்டாக்’ நிறுவனத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த டாக்டர் ஹேமா என்பவர் தாக்கல் செய்த மனு:விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுாரைச் சேர்ந்தவரை திருமணம் செய்தேன். 2021 நவம்பர் வரை, திருமணத்துக்கு ஒரு வாரம் முன்பு வரை, புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றினேன். பின், புதுச்சேரியில் உள்ள தேர்வு மையத்தில் சேர்ந்து, முதுநிலை படிப்பில் சேர்வதற்கான ‘நீட்’ தேர்வுக்கு தயாரானேன்.
என் சொந்த ஊர், புதுச்சேரி தான்; கணவரின் சொந்த ஊர் திருக்கோவிலுார். அதனால், என் சொந்த ஊர் மாறி விடாது. படித்தவர்கள், வேலை செய்வது ஒரு ஊராகவும், சொந்த ஊர் வேறாகவும் இருக்கும். என் திருமணத்தை அடிப்படையாக வைத்து, பிறப்பிட சான்றிதழ் வழங்க, புதுச்சேரி தாசில்தார் மறுத்தது சரியல்ல. திருமணம் செய்தததை அடிப்படையாக வைத்து, சொந்த ஊரை மாற்றி கொண்டதாக கூற முடியாது.
எனவே, தாசில்தாரின் உத்தரவை ரத்து செய்து, பிறப்பிட சான்றிதழ் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும். முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் சிங்காரவேலன் வாதாடினார். இவ்வழக்கில், ‘சென்டாக்’ எனப்படும் மாணவர் சேர்க்கைக்கான மத்திய குழுவை சேர்த்து, பதில் அளிக்கும்படி, நீதிபதி உத்தரவிட்டார்.
முதுநிலை படிப்பில் ஒரு இடத்தை காலியாக வைக்கவும், கவுன்சிலிங்கில் பங்கேற்க மனுதாரரை அனுமதிக்கவும், மறு உத்தரவு வரும் வரை, மனுதாரருக்கு மாணவர் சேர்க்கை தொடர்பாக இறுதி உத்தரவு பிறப்பிக்கக் கூடாது எனவும், நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement