இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, டி20 உலகப் கோப்பையில் விளையாடமாட்டார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
8-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 16-ம் தேதி துவங்கி நவம்பர் மாதம் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இதற்காக இந்திய அணி விரைவில் ஆஸ்திரேலியா புறப்படுகின்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியுடன், வரும் 23-ம் தேதி தனது முதல் போட்டியில் சந்திக்கிறது. ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தநிலையில், இந்திய அணி அதற்கு பழிதீர்க்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா காயத்தால் அவதிப்பட்டு வருகின்றார். இதனால் மருத்துவ நிபுணர்கள் உடனான ஆலோசனைக்கு பிறகு அவர் போட்டியிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். முன்னதாக, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் காயம் காரணமாக பும்ரா விளையாடவில்லை. இந்நிலையில் டி20 உலகப்கோப்பை போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பும்ரா இல்லாத நிலையில் டெத் ஓவர்களில் பந்துவீசுவது இந்தியாவிற்கு கடினமானதாக இருக்கும் எனவும், அதற்கு மற்ற பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் எனவும் முன்னாள் இந்திய அணி தேர்வாளர் சபா கரீம் நேற்று கூறியது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM