திருவனந்தபுரம்: இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் நோய் தொற்று பரவல் வெகுவாக குறைந்து உள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. தொற்று பரவல் குறைந்துள்ள போதிலும் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் கேரளாவில் ஓணம் பண்டிகைக்குப் பிறகு கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது என்று இந்திய மருத்துவ சங்கம் (கேரளா பிரிவு) எச்சரித்து உள்ளது.
கொச்சியில் நடந்த டாக்டர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டது. ஓணம் பண்டிகைக்கு பிறகு கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நோய் பரிசோதனைக்கு யாரும் முன் வருவதில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருவரும் பின்பற்றுவதில்லை. தற்போது கேரளாவில் பரவுவது புதிய வகை வைரஸ் இல்லை என்றாலும், அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும் என்று டாக்டர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.