பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சார்ந்த வன்கொடுமைகள், அச்சுறுத்தல்கள், தொல்லைகள் நித்தமும் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. சட்ட ரீதியாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் முற்றிலும் தடுக்கப்பட முடியாததால் காவல் மற்றும் நீதித்துறைக்கு பெரும் சவால் நிறைந்ததாகவே இருக்கின்றன.
இப்படி இருக்கையில் கேரளாவில் 10 வயது சிறுமியை இரண்டு ஆண்டுகளாக பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்த 41 வயது நபருக்கு 142 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்தும், 5 லட்சம் அபராதம் கட்டச் சொல்லியும் பத்தனம்திட்டா போக்சோ நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
அபராதம் கட்டாவிட்டால் சிறை தண்டனை மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்படும் என்றும் போக்சோ நீதிமன்றம் தெரிவித்துள்ளது. போக்சோ வழக்குகளிலேயே இதுவரை கொடுக்கப்பட்ட அதிகபட்ச தண்டனையே இதுவாகத்தான் பார்க்கப்படுகிறது.
குற்றவாளி என நிரூபணமாகி தண்டனை பெற்ற அந்த நபர் அனந்தன் என்கிற பாபு என அறியப்படுகிறார். 41 வயதான இவர் அதிகபட்சம் 60 ஆண்டுகள் அதாவது தன்னுடைய உயிர் இருக்கும் வரை ஜெயில் தன் வாழ்வை கழிப்பார் என என கூறப்பட்டிருக்கிறது.
குற்றம் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
கடந்த 2021ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி திருவல்லா காவல் நிலையத்தில் அனந்தன் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி 2019-2021 முதல் இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக 10 வயது சிறுமியை அனந்தன் கடுமையான வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றொருக்கு நெருங்கிய உறவினரான அனந்தன் அடிக்கடி சிறுமியின் வீட்டில் வந்து தங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார். அப்போதுதான் சிறுமியை வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார் என தெரிய வந்திருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM