புதுடெல்லி: உலகின் மிக உயரமான சிவபெருமானின் ஆலயம், பனி படர்ந்து காணப்படும் புகைப்படங்கள் அனைவரையும் பரவசமூட்டுகின்றன. தற்போது நவராத்திரி திருவிழா கோலாகலமாக அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், உலகின் கண்கள், கலாச்சார பாரம்பரிய மிக்க இந்தியாவின் வழிபாடுகள் மீது நிலை கொண்டிருக்கின்றன. இந்து ஆலயங்கள், தெய்வங்கள், பூஜைகள் கொண்டாட்டங்கள் என இந்தியாவின் இந்து மத நிகழ்வுகளை உலகமே, பரவசமாக பார்க்கிறது.
இமயமலையில், இமவான் மகள் அன்னை பார்வதி பிறந்தாள் என்பதும், சிவனின் இருப்பிடமும் கைலாசம் என்பதாலும் இந்தியாவின் ஆன்மீக நம்பிக்கைகளில் இந்த பனிமலை எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்தது.
துங்கநாத் கோவில், தற்போது முற்றிலும் பனியால் மூடப்பட்டிருப்பதைக் காட்டும் கோவில் வீடியோ, 360 டிகிரி வான்வழி காட்சியாக பதிவு செய்யபட்டுள்ளது. அந்த வீடியோவில். ‘கேதார்நாத்’ படத்தின் ‘நமோ நமோ’ என்ற புகழ்பெற்ற பாடலும் பின்னணியில் சேர்த்து வெளியாகியிருக்கும் வீடியோ, இணையத்தில் வைரலாகிறது.
Incredible India
World’s Highest Located Mahadev Mandir.., believed to be 5000 years old !
Uttarakhand— Erik Solheim (@ErikSolheim) October 2, 2022
இதயத்தைத் தொடும் மனதை மயக்கும் சிவனின் ஆலயத்தின் அழகை கண்டு வியக்கும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதை பார்த்தும், பகிர்ந்தும் வைரலாக்கிவிட்டனர்.
இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் 50,000 விருப்பங்களையும் பெற்றுள்ள இந்த கோவில் 5000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது!
ஆச்சரியத்தை ஏற்படுத்தும் இந்த வீடியோவில், வெண்பனி மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள சிவன் கோயிலை காணலாம், பனிலிங்கமாய் அமர்நாத்தில் சிவன் தோன்றுவார் என்றால், துங்கநாத்தில் பனிகளுக்கு இடையே கோவில் மட்டுமே தோன்றுகிறது.
இந்த ஆலயத்தின் அற்புதமான தோற்றம், இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தது. அந்த வீடியோவைப் பார்த்ததும் மக்கள் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்
‘கோயிலின் கட்டிடக்கலை சிறப்பாக உள்ளது, பனிச்சரிவுகள் மற்றும் பூகம்பங்களில் கூட தப்பிப்பிழைத்த ஆச்சரியமான ஆலயம் இது. மற்றுவொருவரின் கருத்து இது ‘துங்கநாத் மகாதேவ் கோவில், பஞ்ச கேதாரங்களில் ஒன்று. கோவிலுக்கு செல்லும் வழி கண்கவரும் தோற்றத்தில் உள்ளது.. சற்று மேலே சந்திரசிலா உள்ளது, அங்கு இமயமலை சிகரங்களின் 270 டிகிரி அகலமான காட்சி தெரியும் என்று தெரிவித்துள்ளர்.
உத்தரகண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் 3,680 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள துங்கநாத் கோவில், உலகின் மிக உயரமான சிவன் கோயிலாகும். இக்கோவில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது.