செயற்கை கருத்தரிப்பு மையங்கள்: தமிழக அரசு கிடுக்கிப்பிடி உத்தரவு!

இந்தியாவை பொறுத்தவரை குழந்தையின்மை பிரச்சினையால் கோடிக்கணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, நகர்ப்புறங்களில் ஏராளமானோர் இந்த பிரச்சினைக்கு ஆளாகின்றனர். இதனால், செயற்கை கருத்தரிப்பு மையங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில், பல மையங்கள் போலியாக செயல்பட்டு வருகின்றன. மேலும், இத்தகைய செயற்கை கருத்தரிப்பு மையங்களில் பல முறைகேடுகளும் நடைபெறுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தில் செயல்படும் போலியான கருத்தரிப்பு மையங்களை கண்டறிய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, செயற்கை கருத்தரிப்பு மையங்கள் கட்டணம் செலுத்தி கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு வழிகாட்டுதல் படி ART சட்டம் 2021ன் படி கருத்தரிப்பு மையங்களுக்கு பதிவு கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. கருமுட்டை சேமிப்பு வங்கி, கருமுட்டை கருப்பையில் செலுத்தும் மையம், கருதரிப்பு மையங்கள், வாடகை தாய் மையம் என நான்கு வகை மருத்துவ மையங்களாக பிரிக்கப்பட்டு பதிவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கருமுட்டை சேமிப்பு வங்கிக்கு 50 ஆயிரம் ரூபாயும், கருப்பையில் செலுத்தும் லெவல் 1 தரத்தில் இருக்கும் மையத்திற்கு 50,000 ரூபாயும், தியேட்டருடன் கூடிய கருதரிப்பு மையத்திற்கு 2 லட்சம் ரூபாயும், பிரசவம் வரை சிகிச்சையளிக்கும் தியேட்டருடன் கூடிய வாடகை தாய் மையத்திற்கு 2 லட்சம் ரூபாயும் பதிவு கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வருகிற 24ஆம் பதிவு செய்வதற்கான கடைசி தேதியாகும்.

அதற்குள், செயற்கை கருத்தரிப்பு மையங்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த பதிவு கட்டணத்தை https://www.onlinesbi.sbi/sbicollect/icollecthome.htm?corpID=5067004 என்ற இணையதளம் மூலம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் போலி கருதரிப்பு மையங்கள் செயல்படாமல் தடுக்க முடியும் என தெரிவித்துள்ள சுகாதாரத்துறை, 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பதிவு கட்டணத்தை பாதியாக செலுத்தி மறுபதிவு செய்து கொள்ளவும், இந்த நடைமுறையின்படி ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் மறு பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.