வேலூர் மாவட்டம் பொன்னையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த மருந்தாளுநரிடம் அமைச்சர் துரைமுருகன் பாம்பு கடிக்கு மருந்து எடுத்துவர சொன்னார். ஆனால், பாம்பு கடிக்கு மருந்தில்லை எனவும், ஆரம்ப சுகாதார நிலையம் பழுதடைந்திருந்தது எனவே இங்கு வந்த எக்ஸ்ரே கருவி சோளிங்கர் அருகேயுள்ள கொடைக்கல்லுக்கு எடுத்து செல்லப்பட்டதாக அங்கிருந்தவர்கள் கூறினார்கள். இதனையடுத்து ஆரம்ப சுகாதார நிலையம் சரியாக செயல்படவில்லை என கூறி இரண்டு மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது.
முன்னதாக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர்கள் சரியாக இல்லாததால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். இங்கு பாம்பு கடிக்குக்கூட மருந்துகள் இல்லை. இதனால் நோயாளிகள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு 50 கிலோமீட்டர் தூரம் செல்கின்றனர். அப்படி அவர்கள் செல்லும் வழியில் நோயாளிகள் உயிரிழக்கின்றனர். அதுமட்டுமின்றி கட்டடம் பழுதடைந்துள்ளது இதனை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்டிதர சுகாதாரத் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் மா,சுப்பிரமணியன் பேசியபோது,“பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், லாலாப்பேட்டை சுகாதார நிலையம் ஆகியவற்றை ஆய்வு செய்தோம். இதில் பொன்னையில் மருந்துகளை வாங்கி வந்து வைக்காமல் உள்ளனர். மருந்தாளுநர் பணியும் காலியாக உள்ளது. மருத்துவர்கள் உள்ளூரில் இருப்பதால் சரியாக செயல்படுவதில்லை. எனவே பணியிட மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மயிலாடுதுறை,திருப்பத்தூர்,ராணிப்பேட்டை, காஞ்சிபுரம்,பெரம்பலூர், தென்காசி ஆகிய ஆறு மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க தொடர் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது. தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு கிடையாது. 38 மாவட்டங்களிலும் அரசு மருந்து கிடங்குகள் உள்ளன. அனைத்து மருந்து கிடங்குகளையும் செய்தியாளர்கள் ஆய்வு செய்யலாம்” என்று கூறினார்.
இதற்கிடையே, மருந்து தட்டுப்பாடு இருக்கிறதென்று அமைச்சர் துரைமுருகன் கூற, அதே இடத்தில் மருந்து தட்டுப்பாடு எதுவும் இல்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். இதனால் அங்கு குழப்பமான சூழல் நிலவியது.