சென்னை கே.கே நகர் பாரதிதாசன் காலனியை சேர்ந்தவர் சீனிவாசராஜா(53). டெய்லரான இவருக்கு நரேந்திரன்(23) மற்றும் கீர்த்தனா ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர். நரேந்திரன் பிகாம் படித்துவிட்டு பெருங்குடியில் உள்ள ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நரேந்திரன் ஆன்லைன் லோன் ஆப் மூலமாக 33 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். ஆப்பில் கடனாக பெற்ற பணமான 33 ஆயிரம் ரூபாயை நரேந்திரன் திருப்பி செலுத்தி உள்ளார்.
பின்னர் மீண்டும் 33 ஆயிரம் ரூபாய் கடன் செலுத்த வேண்டும் என ஆன்லைன் லோன் ஆப் மோசடி கும்பல் பல முறை போன் செய்ததை கண்டு நரேந்திரன் அதிர்ச்சியடைந்து உள்ளார். பின்னர் தொடர்ந்து ஆபாசமாக பேசி பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்து வந்ததால் நரேந்திரன் அவரது தந்தையிடம் இருந்து 50ஆயிரம் பெற்று செலுத்தி உள்ளார்.
பின்னர் மீண்டும் 50 ஆயிரம் செலுத்த வேண்டுமென லோன் ஆப்பில் இருந்து நரேந்திரனுக்கு போன் செய்து தொந்தரவு கொடுத்து வந்ததால் மன உளைச்சல் அடைந்துள்ளார். இதனால் நரேந்திரன் கடனை திருப்பி செலுத்துவதற்காக மற்றொரு லோன் ஆப்பிலிருந்து கடனை பெற்றுள்ளார். இதே போல கடந்த 15 நாட்களுக்குள் பல லோன் ஆப்பிலிருந்து சுமார் 80 ஆயிரம் ரூபாய் வரை நரேந்திரன் கடன் பெற்றுள்ளார். இதனை கட்டமுடியாமல் திணறிய நிலையில் நரேந்திரனின் புகைப்படத்தை மார்பிங் செய்து, அவரது செல்போன் தொடர்பில் இருந்த பெண்களுக்கு நரேந்திரனை கடனை செலுத்த சொல்லி மிரட்டி உள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை நரேந்திரனின் பெற்றோர் வெளியே சென்ற நிலையில், நரேந்திரன் வீட்டிலேயே தனியாக இருந்துள்ளார். அப்போது நரேந்திரனின் தாய்க்கு மோசடி நபர்கள் போன் செய்து மகனை கடனை செலுத்த சொல்லி மிரட்டி உள்ளதாக தெரிகிறது. அப்போது, அவர் நரேந்திரனை தொடர்பு கொண்டுள்ளார். நரேந்திரன் போன் எடுக்காததால் சந்தேகமடைந்து அவரது உறவினரை வீட்டிற்கு சென்று பார்க்க கூறியுள்ளார். இதையடுத்து வீட்டிற்கு சென்று பார்த்த போது நரேந்திரன் தாழிட்டு கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக எம்ஜி.ஆர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.