நண்பனை கொலை செய்தவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை குறைப்பு.. காரணம் இதுதான்!

குடிபோதையில் நண்பனைத் தாக்கி மரணம் ஏற்படுத்தியவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, 7 ஆண்டுகள் சிறை தண்டனையாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பால் சந்தையில் பால் கவர்களை சேகரித்து விற்பனை செய்யும் வேலையை மணி மற்றும் விக்கி என்ற இரு நண்பர்கள் செய்து வந்தனர். கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி மாலை வழக்கம் போல் வேலையை முடித்து விட்டு இருவரும் மது அருந்த சென்றுள்ளார்கள். மது அருந்திக்கொண்டிருக்கும் போதே இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மணி, விக்கியின் இடுப்பு பகுதியில் கைகளால் குத்தி தாக்கியதுடன், கல் ஒன்றை எடுத்து விக்கியின் கால் மீது போட்டுள்ளார் மணி.

image
காயமடைந்த விக்கி, கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்ட விக்கி, மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கோவை ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மணியை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கோவை அமர்வு நீதிமன்றம்,  மணிக்கு ஆயுள் தண்டனை விதித்து  தீர்ப்பளித்தது.

தண்டனையை ரத்து செய்ய கோரி மணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும்  ஆர்.எம்.டி.டீக்காராமன் அமர்வு,  மனுதாரர் மணி அவரது நண்பர் விக்கியை, குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், இடுப்பு பகுதியில் கைகளால் குத்தியதுடன், காலில் கல்லை போட்டதை தவிர வேறு எந்த பாகத்திலும் தாக்கவில்லை என்பதால்,  இதை கொலை வழக்காக கருத முடியாது என்றும் தெளிவுபடுத்தியது.

இதையடுத்து கொலை குற்றச்சாட்டில் மணிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்த நீதிபதிகள், கொலை செய்யும் உள்நோக்கமின்றி மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டில், 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.

இதையும் படிக்க: தென்காசி: பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த பிரபல ரவுடி உட்பட 6 பேர் கைதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.