தொடர் விடுமுறையின் காரணமாக ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். குடும்பம் குடும்பமாக ஏற்காடு வந்துள்ள மக்கள், அங்கு இயற்கையான சூழலுக்கு மத்தியில், சொந்தங்கள் மற்றும் நண்பர்களுடன் இனிமையாக பொழுதை கழித்து வருகிறார்கள். சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலா தளத்திற்கு வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் காலாண்டு தேர்வு முடிவடைந்து பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் ஆயுத பூஜை விஜயதசமி பூஜை ஆகியவற்றிற்காக அரசு விடுமுறையும் விடப்பட்டுள்ளதால், ஏற்காடு சுற்றுலா தளத்திற்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
மேலும் அங்குள்ள லேடிஸ் சிட் ரோஜா தோட்டம், சேர்வராயன் கோயில், அண்ணா பூங்கா, கரடியூர் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு தளங்களுக்கு குடும்பத்துடன் சென்று குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக சுற்றுலா பயணிகள் கொண்டாடி புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
ஏற்காட்டில் பிரசித்தி பெற்ற படகு சவாரி செய்வதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் காத்திருக்கின்றனர். மேலும் தற்பொழுது ஏற்காட்டில் பனிமூட்டம் அதிகளவில் காணப்படுவதால் அவ்வப்போது லேசான சாரல் மழையும் பெய்து வருகிறது. பனியும் குளிரும் சேர, நல்ல சீதோஷ்ண நிலை உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆண்டு முழுவதும் பெரியவர்கள் அவரவரது பணிகளிலும், குழந்தைகள் படிப்பிலும் படு பிஸியாக, இறுக்கமாக இருப்பதால், இப்படிப்பட்ட சுற்றுலாக்களும், விடுமுறைகளும் அவர்களுக்கு ஒருவித புத்துணர்ச்சியை அளிக்கின்றன.