கோவையில் தொலைவைக் காட்டும் மைல்கல்லுக்கு பொட்டு வைத்து பூஜை செய்து படையலிட்டு ஆயுதபூஜை கொண்டாடியுள்ளனர் கோவை மக்கள்.
குசும்புக்கு பஞ்சமில்லாத ஊர் கோயம்புத்தூர் என்று சொல்வார்கள். இந்த நிலையில், திருநெல்வேலி எனும் படத்தில் வரும் விவேக் காமெடியில் மைல்கல்லை குலதெய்வமாக வழிபாடு செய்தது போல் கோவையில் மைல்கல்லுக்கு பூஜை செய்யப்பட்டு படையல் படைத்து வழிபட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே பூலுவபட்டியில் பழைய மைல்கல் சேதம் அடைந்ததால் அதை அகற்றிவிட்டு புதிய மைல்கல் வைக்கப்பட்டு இருந்தது.
சிறுவாணிக்கு 20 கிலோ மீட்டருக்கு முன்பு வைக்கப்பட்டுள்ள மைல்கல்லுக்கும், முக்காளி என்ற இடத்திற்கு 45 கிலோ மீட்டருக்கு முன்பு வைக்கப்பட்ட கல்லுக்கும் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டுள்ளது.
அந்த மைல்கற்களுக்கு இருபுறமும் வாழைக்கன்று வைத்து, மாவிலையால் தோரணம் கட்டி, மாலையிட்டு, பொட்டு வைத்து படையல் படைத்து ஆயுத பூஜை கொண்டாடப்பட்டுள்ளது. இது மைல்கற்களை கொண்டாடுவதாக அல்லாமல், தங்கள் ஊரை நேசிக்கும் இளைஞர்கள் செய்த ஆயுத பூஜை படையல் அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.