புதுடெல்லி: ராகுல் காந்தியின் இந்தியா ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி திங்கள் கிழமை கர்நாடக செல்கிறார். அக்.6-ம் தேதி கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொள்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்.7ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை யாத்திரையைத் தொடங்கினார். இந்த யாத்திரை தமிழகம், கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களைக் கடந்த தற்போது பாஜக ஆளும் கர்நாடகாவில் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த யாத்திரையில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று கர்நாடகா செல்கிறார். இதற்காக கூர்கில் உள்ள மட்கேரிக்கு விமானத்தில் செல்லும் சோனியா அங்கு ஒரு தனியார் விடுதியில் தங்குகிறார்.
மைசூரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை முடித்துக் கொண்டு சோனியாவைச் சந்திப்பதற்காக ராகுல்காந்தி மட்கேரி செல்கிறார். அக்.6ம் தேதி யாத்திரை மீண்டும் தொடங்கும் வரை இருவரும் கூர்க்கில் தங்குகின்றனர்.
நம்மை யாரும் பிரிக்க முடியாது: ராகுல்
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடந்த யாத்திரை முடிந்து நடந்த கூட்டத்தில் கொட்டும் மழையில் ராகுல் காந்தி தொண்டர்களிடம் மாநிலத்தின் ஆளும் கட்சியினை குற்றம் சாட்டிப் பேசினார். அந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ராகுல் காந்தி. அதில் “வெயில்,மழை, குளிர் என எதுவுமே இந்த யாத்திரையை தடுத்து நிறுத்த முடியாது. நதியைப் போன்ற இந்த யாத்திரை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரைத் தொடரும். இந்த நதியோட்டத்தில் வெறுப்பு வன்முறை போன்றவைகளை உங்களால் பார்க்க முடியாது. இந்தியாவின் மரபு மற்றும் வரலாறான அன்பு சகோதரத்துவமும் மட்டுமே இதில் நிறைந்திருக்கும் என்று தெரிவித்தார்
ராகுல் காந்தியின் இந்த செயலுக்காக காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸின் மூத்த தலைவர்களுள் ஒருவராக ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ”வெறுப்புக்கு எதிராக இந்தியாவை ஒன்றிணைப்பதில் இருந்து, வேலையின்மை, விலைவாசி உயர்வு பற்றிப் பேசுவதில் இருந்து பாரத் ஜோடோ யாத்திரையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று காந்தி ஜெயந்தி நாளின் மாலையில் மைசூரில் பெய்த கனமழைக்கு மத்தியில் மக்கள் கடலில் பேசிய ராகுல் காந்தியின் இந்த அறிவிப்பு மிகவும் தெளிவானது” என்று தெரிவித்துள்ளார்.
இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிவி ஸ்ரீனிவாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ”பிரிந்து கிடக்கும் தேசத்தை ஒன்றிணைக்க கிளம்பியிருக்கும் இந்த மனிதனின் துணிச்சலுக்கு சொர்க்கத்தில் இருந்து பாபுஜி ஆசிர்வாதம் செய்வது போல தெரிகிறது. தேசத்தின் சேவையில் அனைத்தையும் இழந்தும், பயமின்றி அராஜக அரசை எதிர்த்து போராடி வருகிறார். தைரியமும், உறுதியும் கொண்டவர்” என்று தெரிவித்துள்ளார். மேலும் மழையில் நனையும் ராகுலின் புகைப்படத்தை இணைத்துள்ளார்.
மைசூரில் நடந்து வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை, மாலை 4.30 மணிக்கு பாண்டவபுரத்தை அடைந்து நிறைவடைகிறது. இரண்டு நாள் பூஜை விடுமுறைக்கு பின்னர் அக்.6ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது. இதில் சோனியா காந்தி கலந்து கொள்கிறார்.
भारत को एकजुट करने से,
हमें कोई नहीं रोक सकता।भारत की आवाज़ उठाने से,
हमें कोई नहीं रोक सकता।कन्याकुमारी से कश्मीर तक जाएगी, भारत जोड़ो यात्रा को कोई नहीं रोक सकता। pic.twitter.com/sj80bLsHbF
— Rahul Gandhi (@RahulGandhi) October 2, 2022