சென்னை: தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டதால் தமிழக அரசு மீது ஏழை எளிய மக்கள் மிகுந்த கோபம் கொண்டிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகத்தான திட்டம் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம். கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் ஏழையெளிய பெண்களுக்கு திருமணம் நடைபெறும்போது, அவர்களுக்கு தாலிக்கு தங்கம் என்பதே ஒரு கேள்விக்குறியாக இருந்துவந்தது. அதேநேரத்தில் பணமும் பெரிய பிரச்சினையாக இருந்தது.
இதை கருத்தில் கொண்டே தாலிக்கு தங்கம் திட்டம் உருவானது. இதுவொரு உன்னதமான திட்டம். இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத திட்டம். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களாக இருந்தால், ஒரு சவரன் தங்கமும், ரூ.25 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டு வந்தது. பட்டப்படிப்பு முடித்த பெண்களாக இருந்தால் ஒரு சவரன் தங்கத்தோடு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இதற்காகத்தான் ரூ.7 ஆயிரம் கோடி ரூபாய் அதிமுக அரசு செலவு செய்தது.
மக்களின் ஆதரவையும், வரவேற்பையும் பெற்ற இந்த திட்டத்தையே திமுக முடக்கிவிட்டது. இந்த திட்டத்தின் பயனாளிகள் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் மட்டுமல்ல, அரசு உதவிபெறும் பள்ளி, கல்லூரி உள்பட எங்கு படித்தவர்களாக இருந்தாலும் அவர்கள் பயனாளிகளாக கருதப்பட்டு, உதவிகள் வழங்கப்பட்டன.
தமிழக மக்களின் கோபத்தை பெறுகின்ற வகையில், இத்திட்டத்தை கைவிட்டுவிட்டு, வெறுமனே கல்லூரியில் பட்டப்படிப்புக்குச் செல்கிற மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 என்று கணக்கிட்டு, அந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர். அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்திருந்தால்கூட இத்திட்டம் கிடையாது. மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை நீங்கள் நடைமுறைபடுத்துங்கள். ஆனால், ஏன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை அரசு முடிவுக்கு கொண்டுவந்தது” என்று ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.