பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்புக்கு, நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பிஎஃப்ஐயுடன் தொடர்புடைய கிளை அமைப்புகளுக்கும் அதிரடியாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயலுக்கு நிதி உதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாதச் செயலுக்கு ஆட்களை சேர்த்தல் என்பன உள்பட பல்வேறு குற்றச்சாட்டு அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தேசிய புலனாய்வு அமைப்பு நாடு முழுவதும் சோதனை நடத்தி அந்த அமைப்பின் நிர்வாகிகளை கைது செய்தது. இதை தொடர்ந்து அந்த அமைப்பிற்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்தது.
இந்தநிலையில், தடை செய்யப்பட்ட இந்த அமைப்புக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்
மற்றும் நாம் தமிழர் கட்சித் தலைவர்
உள்ளிட்டோர் தொடர்ந்து பேசி வருவதாக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.
அந்தவகையில் டெல்லியில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் அர்ஜூன் சம்பத்துடன் 10 பேர் பேனருடன் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
இந்தியாவில் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் என்ற அமைப்பை மத்திய அரசு தடை செய்துள்ளது. ஆனாலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இயக்கத்தை ஆதரித்து பேசி வருகின்றனர்.
சீமான் ஏற்கனவே யாசிக் மாலிக்கை தமிழகம் அழைத்து வந்து தனித்தமிழ்நாடு கோரும் போராட்டத்தில் கலந்து கொள்ள வைத்துள்ளார். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ், மற்றும் பாஜக தொண்டர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு ஒரு தலைபட்சமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்து கூறினார்.
அர்ஜூன் சம்பத் வழக்கமாகவே திருமாவளவனுக்கு எதிராக பேசக்கூடியவர் தான் என்றாலும், தற்போது ஒருப்படி மேலே போய் டெல்லியில் போராட்டத்தை நடத்தி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அதே சமயம் இதன் பின்னணியில் பாஜக உள்ளதாகவும் பரவலாக பேசப்படுகிறது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தை எதிர்க்கும் திருமாவளவன் மீது நேரடியாக நடவடிக்கை எடுத்தால் பாஜக பழிக்குப்பழி வாங்குகிறது என்ற முத்திரை குத்தப்படும்.
ஆனால் பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு ஆதரவாக இருக்கும் அர்ஜூன் சம்பத் தலைமையில் இது போன்ற போராட்டத்தை நடத்த செய்து, அதன் தொடர்ச்சியாக ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் பழியானது அர்ஜூன் சம்பத் மீது விழுந்துவிடும் என்பது டெல்லி மேலிடத்தின் கணக்கு எனக்கூறி நம்பத்தகுந்த வட்டாரங்கள் ஷாக் தகவல் தருகின்றன.