புதுச்சேரி மற்றும் காரைக்கால்: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் யூனியன் பிரதேசமான புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அமைதியான முறையில் பலத்த பாதுகாப்புடன் பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியில் புதுச்சேரி அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன் குமார் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதும் அணிவகுப்பு பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் சார்பில் அனுமதி கோரப்பட்டது. சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு காரணங்களைக் காட்டி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது.
இந்நிலையில், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை (அக்.2) இந்தப் பேரணியை நடத்த ஆர்எஸ்எஸ் அனுமதி கேட்டிருந்தது. இதற்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி அளித்தது. அதன்படி, ஆர்எஸ்எஸ் பேரணி புதுச்சேரி பாலாஜி திரையரங்கத்திற்கு அருகில் மாலை 4 மணிக்கு தொடங்கியது.
உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், அமைச்சர் சாய் சரவணன் குமார், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், ரிச்சர்ட் ஜான்குமார், பாஜக மாநிலத்தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.
பேரணி காமராஜர் சாலை, நேரு வீதி, மிஷன் வீதி, புஸ்ஸி வீதி, மறைமலை அடிகள் சாலை வழியாக கடலூர் சாலையை அடைந்து அங்குள்ள சிங்காரவேலர் சிலை அருகே மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. முக்கிய சந்திப்புகளில் பாஜக மகளிரணியினர் மலர் தூவி வரவேற்றனர். பேரணி 5 மணி அளவில் சுதேசி மில் பொதுக்கூட்டத்தை அடைந்தது.
ஆர்எஸ்எஸ் நடத்திய இந்த பேரணியில் நகரின் முக்கிய சந்திப்புகளில் துணை ராணுவப் படையினர் மற்றும் போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். சுதேசி மில் வளாகத்தில் பொதுக்கூட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதையடுத்து பொதுக்கூட்டமும் நடந்தது.
இக்கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் மாநில இணை செயலர் ராஜசேகர் சிறப்புரையாற்றினார். அத்துடன் மாவட்டத்தலைவர் சீனிவாசன், கோட்டத்தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கூறுகையில், “சங்கம் துவங்கப்பட்ட விஜயதசமியொட்டி நாடு முழுவதும் சீருடை அணிவகுப்பை ஆர்எஸ்எஸ் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது. எங்கள் பேரணியால் மக்கள் மத்தியில் தன்னம்பிக்கை ஒற்றுமை மற்றும் ஒழுக்கம் விதைத்துள்ளோம். நமது நாட்டின் சுதந்திரத்துக்காக ஏராளமானோர் பெரும் தியாகம் செய்துள்ளார்கள். தேசம்தான் முதலில் என்று அவர்கள் கருதியதால்தான் நாடு சுதந்திரமாக உள்ளது. அவர்களுக்கு கடன்பட்டுள்ளோம். அவர்களின் வீரம் மற்றும் தியாகத்தை போற்றியும் இப்பேரணி நடந்தது” என்று தெரிவித்தனர்.
காரைக்காலில் ஆர்எஸ்எஸ் பேரணி- 500-க்கும் மேற்பட்டோர் சீருடையுடன் பங்கேற்பு
காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை (அக்.2) மாலை நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணி, பொதுக்கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் சீருடையுடன் பங்கேற்றனர்.
காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகிலிருந்து தொடங்கிய பேரணியை உ.வே.கு.அரங்கநாதாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார். காரைக்கால் நகரின் முக்கிய சாலைகள் வழியாக காரைக்கால் கடற்கரை சாலை வரை நடைபெற்ற பேரணியில், காரைக்கால் மற்றும் அருகில் உள்ள தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த ஆர் எஸ் எஸ் பாஜக இந்து முன்னணி மற்றும் அதனை சார்ந்த அமைப்புகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் சீருடையுடன் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கடற்கரை சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆர்எஸ்எஸ் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் சி.சிவானந்தம் வரவேற்றார். இயற்கை விவசாயி எம்.பாஸ்கர் முன்னிலை வகித்தார். சி.அப்பர் தலைமை வகித்தார். தஞ்சை கோட்டத் தலைவர் கே.கண்ணன் வாழ்த்திப் பேசினார். சேவை பிரிவு தென் தமிழக மாநில செயலாளர் எஸ்.ஆனந்த் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார்.
முன்னதாக தஞ்சை கோட்டத் தலைவர் கே.கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியது. தமிழகத்தில் நவ.6-ம் தேதி பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எந்த நாளில் பேரணி நடத்தினாலும் எங்களுக்குப் பிரச்சனையில்லை. தமிழகத்தில் விதிக்கப்பட்ட தடையால் எங்களுக்கு எவ்வித பாதிப்பும், கவலையும் இல்லை. மாறாக அது உற்சாகத்தை தந்துள்ளது என்றார்.