மும்பை: இனி தொலைபேசியில் பேசும்போது ஹலோ சொல்வதற்கு பதிலாக வந்தே மாதரம் எனக் கூறுமாறு அரசு அதிகாரிகளுக்கு மகராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா அரசு அண்மையில் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், ‘அரசு ஊழியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள் தொலைபேசியில் குடிமக்கள் அல்லது அதிகாரிகளிடம் பேசும்போது ‘ஹலோ’ என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது. அதற்குப் பதிலாக ‘வந்தே மாதரம்’ என்று கூறிய தங்களது பேச்சை தொடங்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாகத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிவிப்பில், தங்களை சந்திக்க வரும் பொதுமக்களிடம் ‘வந்தே மாதரம்’ என்று சொல்லை பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த உத்தரவில், ”ஹலோ என்ற வார்த்தை மேற்கத்திய கலாசாரத்தின் பிரதிபலிப்பு. எந்தவித அர்த்தமும் இல்லாத ஹலோ என்ற வார்த்தை பேசும் நபரிடம் எந்தவித பிணைப்பையும் ஏற்படுத்தாது” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்த சுதிர் முங்கண்டிவார், ‘வந்தேமாதரம்’ என்ற சொல்லை பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல், தேசியவாதத்தை பிரதிபலிக்கும் எந்த வார்த்தையையும் பயன்படுத்தலாம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சி தலைவர் அபு ஆஸ்மி, ”நான் தாக்கரேவை சந்திக்கும்போது அவர் எப்போதும் ‘ஜெய் மகாராஷ்டிரா’ என்றே கூறுவார். அவரது தொண்டர்களும் அப்படி சொல்வார்கள். ஏன் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவே அப்படித்தான் சொல்வார். தற்போது ‘ஜெய் மகாராஷ்டிரா’ என்பதை விட்டுவிட்டு ‘வந்தே மாதரம்’ என்ற உத்தரவு ஷிண்டே ஆர்.எஸ்.எஸ், பிஜேபி அழுத்தத்தில் செயல்படுவதை உணர்த்துகிறது. முஸ்லிம்களை பிரித்துக்காட்டவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாங்கள் (முஸ்லிம்கள்) நாட்டை நேசிக்கிறோம். ஆனால் அல்லாஹ்வின் முன் மட்டுமே தலை வணங்குவோம். ‘வந்தே மாதரம்’ என்று சொல்ல முடியாது. மாறாக ‘சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான்’ என்று சொல்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.