சென்னை: கோயம்பேட்டில் ஆயுதபூஜை சிறப்பு சந்தையில் பூஜை பொருட்களை வாங்க அதிக அளவில் மக்கள் குவிந்தனர். அதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோயம்பேடு சந்தையில் ஆண்டுதோறும் ஆயுதபூஜை சிறப்பு சந்தை திறப்பது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சிறப்பு சந்தை திறக்கப்படவில்லை. இந்த ஆண்டு கடந்த செப். 30-ம் தேதி சிறப்பு சந்தை திறக்கப்பட்டது. இச்சந்தையில் நேற்று பூஜை பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலை மோதியது. மேலும் பெரும்புதூர், மாதவரம், ஒரகடம், கொடுங்கையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் தொழிற்சாலைகள் சார்பில் ஏராளமானோர் மூட்டை மூட்டையாக பொரி கடலை மற்றும் பழங்களை மொத்த விலையில் வாங்கிச் சென்றனர்.
இந்த சந்தையில், வாழைக் கன்று ஒன்று ரூ.10, 10 கன்றுகள் கொண்ட கட்டு ரூ.40, ஒரு படி பொரிரூ.20, நாட்டு சர்க்கரை கிலோ ரூ.80,
மாதுளை, ஆப்பிள் தலா ரூ.100, சாத்துக்குடி ரூ.40, விளாங்காய் ரூ.100, வாழைப்பழம் ஒரு சீப்பு ரூ.80, தோரணம் கட்டு ரூ.20, சாமந்தி முழம் ரூ.40, கனகாம்பரம், கதம்பம், மல்லி ஆகியவை முழம் ரூ.35-க்கு விற்கப்பட்டது. ஒரே இடத்தில் பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் மலிவு விலையில் கிடைப்பதால், அவற்றை வாங்க ஏராளமானோர் சிறப்பு சந்தையில் நேற்று குவிந்தனர். இதனால் சந்தை வளாகத்திலும், வெளியில் உள்ள சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோன்று பாரிமுனையிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.