எதிரிகளின் அச்சுறுத்தல்களை நிரந்தரமாக… செயலிழக்க செய்வோம்!| Dinamalar

புதுடில்லி :”எதிரிகளிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்களை முறியடிக்க வலுவான ராணுவமும், தடுப்பு நடவடிக்கைகளும் தேவை. அந்த தடுப்பு நடவடிக்கை தோல்வி அடையும் போது, அந்த அச்சுறுத்தல்களை நிரந்தரமாக செயல் இழக்கச் செய்வது மட்டுமே ஒரே வழி. அதை நம் படையினர் துடிப்புடன் செய்து வருகின்றனர்,” என, விமானப்படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி தெரிவித்தார்.நம் விமானப்படை தினம் வரும் 8ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி, விமானப்படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:நாளைய போர்க்களங்களில் மிகப்பெரிய மாறுதல்கள் ஏற்பட உள்ளன. அதில் தொழில்நுட்பங்கள் முக்கிய பங்காற்ற போகின்றன. நம் எல்லைகளை பாதுகாக்கும் பணியில், அத்தகைய எதிர்கால மாற்றங்களுக்கு நம் விமானப்படை தயாராக உள்ளது.நாளைய போர்க்களம் தொழில்நுட்பம் சார்ந்ததாக மாறும்போது, நாமும் அதற்கேற்ப முன்னேறி வருகிறோம். எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள நம் விமானப்படை தயாராகவும், எப்போதும் விழிப்புடனும் உள்ளது என்பதை இந்த நேரத்தில் மக்களுக்கு உறுதி அளிக்க விரும்புகிறேன்.

நடவடிக்கை

உலகளாவிய நிலப்பரப்பில் சமீபத்திய நிகழ்வுகளை பார்க்கும்போது, அச்சுறுத்தல்களை முறியடிக்க வலுவான ராணுவமும், தடுப்பு நடவடிக்கைகளும் தேவை என்பது தெளிவாகிறது. அந்த தடுப்பு நடவடிக்கை தோல்வி அடையும்போது, அச்சுறுத்தல்களை நிரந்தரமாக செயல் இழக்கச் செய்வது மட்டுமே ஒரே வழி. அதை நம் விமானப்படை துடிப்புடன் செய்து வருகிறது.கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவம் தங்கள் படைகளை திரும்ப பெற்றாலும், அங்கு சீன விமானப்படையின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். ரேடார்கள் மற்றும் வான்வழி தாக்குதல்களை முறியடிக்கும் நடவடிக்கைகளை அதிகரித்துள்ளோம். தற்போதைய நிலவரப்படி எல்லையில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. அனைத்து பகுதிகளிலும் படைகள் முன்பிருந்த நிலைக்கு திரும்பி வருகின்றன. எல்லையின் வான்வெளியில் சீனா அத்துமீறினாலோ அல்லது வேறு சிக்கல்களை ஏற்படுத்தினாலோ, ராணுவ ‘ஹாட்லைன்’ வாயிலாக சீன அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேச விமானப்படை தயாராக உள்ளது. சீன போர் குணத்தை எதிர்கொள்ள நாம் எப்போதும் தயார் நிலையிலேயே நம் படைகளை வைத்துள்ளோம்.

இந்தோ – பசிபிக் பகுதிகளிலும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம்.சுறுசுறுப்பாக செயல்படும் அதே வேளையில், ரபேல், இலகுரக போர் விமானங்கள் மற்றும் ‘எஸ் – -400’ வான் பாதுகாப்பு அமைப்பு போன்ற சமீபத்தில் வாங்கப்பட்ட பாதுகாப்பு அமைப்புகளின் செயல்பாட்டையும் விமானப்படை துரிதப்படுத்துகிறது.

உறுதுணை

எம்.கே., 1ஏ, ஹெச்.டி.டி., 40 இலகுரக விமான பயிற்சியாளர்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், மாறுபட்ட ரேடார்களை படையில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இலகுரக ஹெலிகாப்டர்கள் நம் படையில் இணைக்கப்பட்டுள்ளது. இது, நம் போர் திறனில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும். ராணுவ உற்பத்தியில் சுயசார்பு குறித்த மத்திய அரசின் முயற்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம். நிறைய உள்நாட்டு நிறுவனங்கள் ராணுவ உற்பத்தியில் ஈடுபடும்போது, உபகரணங்கள், உதிரி பாகங்களில் ஏற்படும் பற்றாக்குறைக்கு நாம் உக்ரைன், ரஷ்யா போன்ற நாடுகளை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.அக்னி வீரர்கள் திட்டத்தில், 10 சதவீத பெண்கள் பணியில் சேர்வர் என எதிர்பார்க்கிறோம். சரியான நேரத்தில் பெண்களையும் ராணுவப் பணியில் ஈடுபடுத்த திறந்த மனதுடன் தயாராக இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

விமானப்படை தின அணிவகுப்பு!

விமானப்படை தினம் குறித்து, ‘குரூப் கேப்டன்’ ரதி கூறியதாவது:வழக்கமாக உத்தர பிரதேசத்தின் காஜியாபாதில் உள்ள ஹிடோன் விமானப்படை தளத்தில் தான் விமானப்படை தின விழா நடக்கும். இந்த முறை, சண்டிகரின் சுக்னா ஏரி பகுதியில் வரும் 8ம் தேதி விழா நடக்க உள்ளது. இதில், ஒற்றை இயந்திரம் உடைய, ‘மிக் 21’ உட்பட 74 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அணிவகுப்பில் பங்கேற்க உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.