நிலக்கரியை இறக்குமதி செய்வதில் அவசரமா? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

நிலக்கரியை இறக்குமதி செய்வதில் தமிழ்நாடு மின்சார வாரியம் அவசரம் காட்டுவதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”மத்திய அரசு 2022-23ஆம் ஆண்டுக்கு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு, 22 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்து உபயோகப்படுத்தும்படி அறிவுறுத்தியது. அதன்படி 2022-23ஆம் ஆண்டில், மூன்று காலாண்டில் சமமாக இறக்குமதி செய்யும்படி முடிவு செய்து, 6 லட்சம் டன்கள் நிலக்கரியை, டன் ஒன்றுக்கு 143 டாலர் (5% GST உட்பட) என்ற அளவில் இறக்குமதி செய்ய உத்தரவு வழங்கியது.

முதல் காலாண்டில் எஞ்சிய 1.3 லட்சம் டன் நிலக்கரியை, மத்திய அரசின் மூலம் டன் ஒன்றுக்கு 203 டாலர் என்ற அளவில் இறக்குமதி செய்து தர தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டது. எதிர்வரும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நிலக்கரி தேவையை ஈடு செய்யும் வகையில், 7.3 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்யும் வகையில், ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, 7 ஒப்பந்த புள்ளிகள் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளன.

பரிசீலனைக்குப்பின் விலைப்புள்ளிகள் திறந்து எதிர்மறை விலைப்புள்ளிகள் மூலம் முடிவு செய்ய குறைந்தது இரண்டு மாதங்கள் ஆகும். கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட பின் நிலக்கரி வந்து சேர குறைந்தது 45 நாட்கள் தேவை. எனவே தற்பொழுது கோரப்பட்ட ஒப்பந்த புள்ளிகள் மூலம் பிப்ரவரி மாதம்தான் நிலக்கரி பெற முடியும். மேலும் ஒப்பந்தப்புள்ளிகள் முடிவு செய்யும் நேரத்தில் நிலக்கரி தேவை, இருப்பு மற்றும் விலை ஆகியவற்றை கருத்தில் கொண்டுதான் முடிவு செய்யப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.