எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து விபத்து: மகனை பறி கொடுத்த தந்தை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு

மும்பை: எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து 7 வயது மகனை பறி கொடுத்த தந்தை, நுகர் வோர் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார். வசாயில் உள்ள ராம்தாஸ் நகரை சேர்ந்தவர் சர்பராஸ் அன்சாரி. கடந்த மாதம் 23ம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் தனது வீட்டில் ஒரு அறையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரியை வைத்து சார்ஜ் போட்டிருந்தார். ஸ்கூட்டருக்கு சார்ஜ் போட்டிருந்த அறையில் இவரது 7 வயது மகன் சபீர் அன்சாரியும், அவரது பாட்டியும் தூங்கினர்.
அதிகாலை சுமார் 5.30 மணியளவில் பேட்டரி வெடித்ததில், சபீரின் பாட்டி சிறிது காயங்களுடன் கிடந்தார். சபீருக்கு, பேட்டரி வெடித்து எரிந்ததில் பலத்த தீக்காயம் காயம் ஏற்பட்டிருந்தது.

80 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்ற சிறுவன், கடந்த மாதம் 30ம் தேதி இறந்தான். இதுகுறித்து மனிக்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சார்ஜ் செய்தபோது பேட்டரி அதிகமாக வெப்பம் அடைந்ததால் வெடித்ததாக போலீஸ் தரப்பில் கூறுகின்றனர். இதனிடையே, இந்த வழக்கில் தனக்கு நஷ்ட ஈடு வழங்கக் கோரி, சிறுவனின் தந்தை சர்பராஸ் அன்சாரி, நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார். ஸ்கூட்டர் வாங்கி ஓராண்டு கூட ஆகவில்லை எனவும், 2 நாட்களுக்கு ஒரு முறை சார்ஜ் போட்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.