நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சியில் கடந்த மார்ச் 2013ம் ஆண்டு, பாதாள சாக்கடை பணி தொடங்கியது. மொத்தம் உள்ள 52 வார்டுகளில் 18 வார்டுகள் முழுமையாகவும், 17 வார்டுகளில் பகுதியாகவும் பாதாள சாக்கடை பணிகள் தொடங்கியது. இந்த பணிகளை குடிநீர் வடிகால் வாரியம் செயல்படுத்தி வருகிறது. மொத்தம் 118.86 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கின. சுமார் 9 ஆண்டுகள் ஆகியும் இந்த பணிகள் முடிவடையாமல் இழுபறி உள்ளன. கடந்த வருடம் இறுதியில் 102.76 கிலோ மீட்டருக்கு பணி முடிக்கப்பட்டது. நீதிமன்ற வழக்கு, நெடுஞ்சாலைதுறை அனுமதி என சில இடர்பாடுகளால் மற்ற பகுதிகளில் பாதாள சாக்கடை பணி முடிவடைய காலதாமதம் ஏற்பட்டது.
பாதாள சாக்கடை பணி தொடங்கிய 2 ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட்டிருந்தால் ரூ52 கோடியை ஒன்றிய அரசு வழங்கி இருக்கும். ஆனால் காலம் கடந்ததால் ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ52 கோடியை மாநில அரசு வழங்கியுள்ளது. இந்த நிலையில் மாநகராட்சியின் முதல் மேயராக பொறுப்பேற்று மகேஷ், நீண்ட காலமாக மாநகரில் கிடப்பில் கிடக்கும் பாதாள சாக்கடை மற்றும் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகளை வேகமாக முடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆண்டு ஜூன் மாதமே பணிகள் முடிவடைந்து விடும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
ஆனால் இன்னும் பாதாள சாக்கடை பணி முடிவடையாத நிலை உள்ளது. பாதாளசாக்கடை வழியாக வரும் கழிவுகள் வடிவீஸ்வரம் பறக்கிங்கால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் நீரேற்று நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து வலம்புரிவிளை உரக்கிடங்கு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு கழிவுகள் உரமாகவும், நீர் விவசாயத்திற்கும் பயன்படுத்தப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் 175 லட்சம் லிட்டர் தண்ணீர் இந்த சுத்திகரிப்பு நிலையம் மூலம் பிரிக்கும் வகையில் 2 பிரமாண்டமான பிளாண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. சுத்திகரிப்பு நிலையம் ரூ17 கோடியிலும், பறக்கின்கால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீரேற்று நிலையம் ரூ6 கோடியிலும் அமைக்கப்பட்டுள்ளது.
பிரதான சாலைகளில் குழாய்கள் பதிப்பு பணிகள் முடிவடைந்து விட்டன. முக்கிய சந்திப்புகளில் இணைப்பு பணிகள் செய்ய வேண்டி இருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் வரை பணிகள் செய்யும் காண்ட்ராக்டருக்கு ரூ10 கோடி பாக்கி இருந்தது. இதனால் அவர் பணி செய்ய முடியாது சென்று விட்டார். இதனால் கடந்த 3 மாதங்களாக பணிகள் நடைபெறாமல் இருந்தன. பின்னர் காண்ட்ராக்டரை சமாதானம் செய்து அழைத்து வந்து தற்போது பாதாள சாக்கடை பணிகள் மீண்டும் தொடங்கி உள்ளன. தற்போது பணிகள் வேகமாக நடக்கின்றன.
சுமார் 90 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். வலம்புரிவிளையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்லும் பிரதான குழாய்கள் இணைப்பு மட்டும் பாக்கி உள்ளது. இந்த பணிகளும் தற்போது வேகமாக நடந்து வருவதால், பணிகள் விரைவில் முடிவடைந்து விடும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ரூ76 கோடியில் தொடங்கி ரூ110 கோடியில் நிற்கிறது
கடந்த 2013ம் ஆண்டு ரூ.76.04 கோடியில் பாதாளசாக்கடை பணி தொடங்கியது. இந்த பணி 2 வருடத்தில் முடித்திருக்க வேண்டும். வழக்கு உள்ளிட்ட காரணத்தால் தாமதம் ஏற்பட்டதால் திட்ட மதிப்பீடு உயர்ந்துள்ளது. 2 ஆண்டில் முடிக்க வேண்டிய திட்டப்பணி 7 வருடம் கடந்தும் முடிக்கப்பட வில்லை. இதனால் திட்டமதிப்பீடு உயர்ந்து தற்போது ரூ.110.51 கோடியில் இந்த பணியை முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.