சென்னை: பெண்களை அடைத்து வைத்து விபச்சாரம்; 5 பேர் அதிரடி கைது – பின்னணி

சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதிப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், அந்த நபர்களை கைது செய்ய காவல்துறை நடவடிக்கையில் இறங்கியது.

இதன் தொடர்ச்சியாக விருகம்பாக்கம் காவல் நிலைய போலீஸ், சாலிகிராமம் சாந்தி காலனி தில்லையாடி வள்ளியம்மை தெருவில் உள்ள ஒரு வீட்டை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, அங்கு ஒரு பெண்ணை அடைத்து வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பெண் காவலர்கள் வீட்டில் சோதனைகள் மேற்கொண்டனர். அதில் அங்கு பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்திய மதுரையை சேர்ந்த கார்த்திக்கேயன்(46),திருநெல்வேலியை சேர்ந்த பெனடிக் நெல்சன்(53) ஆகிய இருவரை கைது செய்தனர். 

அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த ஒரு பெண் மீட்கப்பட்டார். மேலும் அவர்களிடமிருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், திருவேங்கடசாமி தெருவில் உள்ள ஒரு வீட்டிலும் இதேபோன்று விபச்சாரம் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், நடவடிக்கையில் இறங்கிய காவல்துறை அங்கு பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய அதே பகுதியை சேர்ந்த சாந்தி(50), ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்த தேவி(38),நெசப்பாகம் பகுதியை சேர்ந்த சீதாதேவி(34) ஆகிய 3 பெண்களை கைது செய்தனர். 

பாலியல் தொழில் ஈடுபடுத்த வைக்கப்பட்டிருந்த பெண் மீட்கப்பட்டார். அவர்களிடமிருந்து 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்குப் பின்னர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட 2 பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.