சியோல்: வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு எதிர்வினையாக தென்கொரியா – அமெரிக்கா இணைந்து ஏவுகணை சோதனை நடத்தியுள்ளன.
ஜப்பானின் கடற்பகுதியில் வட கொரியா செவ்வாய்க்கிழமையன்று ஏவிய ஏவுகணை சுமார் 4,500 கிமீ பயணித்து இலக்கை தாக்கி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. கடந்த 10 நாட்களில் வட கொரியா நடத்திய 5-வது ஏவுகணை சோதனை இதுவாகும். 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பான் கடற்பகுதியில் வடகொரியா நடத்தும் சோதனை இது.
வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனை காரணமாக ஜப்பானின் வடகிழக்குப் பகுதிகளில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. வட கொரியாவின் செயலுக்கு தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில், வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து புதன்கிழமை கொரிய கடற்பகுதியில் தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை நடத்தினர். இதன் காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
வட கொரியா ஜனவரி மாதம் ஏவுகணை பரிசோதனை ஒன்றைச் செய்தது. 2022-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து வடகொரியா இதுவரை 10-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது, உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. கரோனா காரணமாக மோசமான நிலையை அடைந்துள்ள பொருளாதாரத்தைக் கவனிக்காமல் வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேம்படுத்துவதிலேயே கவனம் செலுத்துகிறது என்று வட கொரியாவை ஐ.நா. கடந்த ஆண்டு கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.