உத்தரகாண்ட் மாநிலம் துமாகோட் அடுத்த பிரோகால் பகுதியில் நேற்று இரவு திருமண நிகழ்விற்காக பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 45 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. உறவினர்கள் ஒன்றாக திருமணத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் பவுரி கர்வால் பகுதி அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக 500 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது. இதில் 25 பேர் பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகின. சம்பவம் குறித்து தகவலறிந்து போலீசார், மாநில பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்தனர். இவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் இருந்து 21 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
உத்தரகாண்ட் பேருந்து விபத்து பற்றி தகவலறிந்து மாநில முதல்வர் முதல் பிரதமர், குடியரசுத் தலைவர் வரை பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள பதிவில், பலரின் இழப்பு மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.