புதுடெல்லி: லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த 10 பேரை மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரவாதிகளாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தடை செய்யப்பட்ட தெஹ்ரீக் உல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் ஹேக் ஜமில் உர் ரஹ்மான், ஜம்மு காஷ்மீர் இஸ்லாமிய முன்னணி அமைப்பின் தலைவர் பிலால் அகமது பெய்க் ஆகியோர் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஹர்கத் உல் ஜிஹாத் இ இஸ்லாமி அமைப்பின் கமாண்டர் ஜாஃபர் இக்பால், அவருடன் இணைந்து செயல்பட்டு வரும் ரஃபிக் நய், லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஹபிபுல்லா மாலிக், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த இம்தியாஸ் அகமது காண்டூ, ஷவுகத் அகமத் ஷேக், பசித் அகமது ரெஷி, பஷிர் அகமது பீர், இர்ஷத் அகமது ஆகியோர் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தெஹ்ரீக் உல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் ஹேக் ஜமில் உர் ரஹ்மான் தற்போது பாகிஸ்தானில் இருப்பதாகத் தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம், இவர்கள் அனைவரும் இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளது.
ஏற்கெனவே, லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹஃபிஸ் சையத், நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் உள்ளிட்ட 38 பேர் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தற்போது, இந்த எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.
சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து தனி நபர்கள் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டு வருகின்றனர். 2019, செப்டம்பரில் 4 பேரும், 2020 ஜூலையில் 9 பேரும் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து, 2020 அக்டோபரில் 18 பேர் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள், காலிஸ்தான் இயக்கம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.