திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான இன்று காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பத்கர்கள் புஷ்கரணியில் புனித நீராடினர். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 27ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் இரவில் பெரிய சேஷம், சின்ன சேஷம், சிம்மம், அன்னம், முத்து பந்தல், சர்வ பூபாலம், மோகினி அலங்காரம், கருட வாகனம், அனுமந்த வாகனம், கஜ வாகனங்களில் எழுந்தருளி ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
8ம் நாளான நேற்று காலை அலைபாயும் மனதை சிதறவிடாமல் கட்டுப்படுத்தி சரீரம் எனும் ரதத்தை நல்வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக மகா தேரோட்டம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என முழக்கமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்து மாட வீதியில் பவனி வந்தனர். இதைதொடர்ந்து இரவு உற்சவத்தில் கலியுகத்தில் துஷ்ட சக்திகளை வதம் செய்வதற்காக பாயும் தங்க குதிரை வாகனத்தில் (அஸ்வ வாகனம்) மலையப்ப சுவாமி கல்கி அலங்காரத்தில் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நிறைவு நாளான இன்று காலை கோயிலில் இருந்து ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்பசுவாமி, சக்கரத்தாழ்வார் ஊர்வலமாக வராக சுவாமி கோயிலில் எழுந்தருளினர். அங்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு பொருட்களால் திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் கோயில் தெப்ப குளத்தில் (புஷ்கரணி) சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது தெப்பக்குளத்தை சுற்றியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என புனித நீராடினர்.
சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியின்போது புனித நீராடினால் சகல பாவங்களும், தோஷங்களும் விலகி கஷ்டங்கள் தீரும் என்பது ஐதீகம். இதைதொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்றிரவு 9 மணிக்கு ஆகம முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க தங்க கொடிமரத்தில் இருந்து பிரம்மோற்சவ கொடி இறக்கப்பட்டு வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.