இனி TRS இல்ல… BRS ஆயிடுச்சு- தேசிய அரசியலுக்கு கே.சந்திரசேகர் ராவ் அச்சாரம்!

தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தேசிய அரசியலில் தடம் பதிக்க களமிறங்கியுள்ளார். இதையொட்டி தனது மாநில அளவிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி (TRS) என்ற அரசியல் கட்சியை மாற்றம் செய்து ”பாரத் ராஷ்டிரிய சமிதி” (BRS) எனப் பெயர் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக ஹைதராபாத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விழாவிற்கு இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சி பிரபலங்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சி தலைவருமான ஹெச்.டி.குமாரசாமி 20 எம்.எல்.ஏக்களுடன் பங்கேற்றார். தமிழகத்தில் இருந்து
திருமாவளவன்
பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. சரியாக பிற்பகல் 1.19 மணிக்கு புதிய அரசியல் கட்சியின் பெயரை கே.சந்திரசேகர் ராவ் அறிவித்து தொடங்கி வைத்தார்.

இதைக் கேட்டு தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். ஹைதராபாத் மாநகர் மட்டுமின்றி தெலங்கானாவின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள், பேனர்கள் என விழாக் கோலம் பூண்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டங்களிலும் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.

பாரத் ராஷ்டிர சமிதி என கட்சி பெயர் மாற்றம் செய்யப்பட்டது தொடர்பான தீர்மானம் வரும் வியாழன் அல்லது வெள்ளி அன்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கே.சந்திரசேகர் ராவின் அடுத்த இலக்கு 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் ஆகும். இதற்கிடையில் சில மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் ஆழம் பார்க்கவுள்ளார். முதல்கட்டமாக 6 சதவீத வாக்குகளை பெறுவதை கே.சந்திரசேகர் ராவ் இலக்காக நிர்ணயம் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளனர். அதேசமயம் பாஜகவிற்கு எதிராக ஒருங்கிணைந்த முன்னணியை தேசிய அளவில் உருவாக்கி மாற்று சக்தியாக விளங்க முயற்சிகள் எடுக்கிறார். இதையொட்டி நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்ட இருக்கிறார்.

வரும் டிசம்பர் 9ஆம் தேதி டெல்லியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தி, தனது புதிய தேசிய கட்சியின் மூலம் தேசிய அளவில் கவனம் ஈர்க்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கே.சந்திரசேகர் ராவின் புதிய அரசியல் கட்சிக்கு TRS-ன் கார் தேர்தல் சின்னமாக தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.