தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை இவ்வருடம் அதிகூடிய வருமானத்தைப் பெற்ற நாளாக, உலக சிறுவர் தினமான ஒக்டோபர் 01ஆம் திகதியன்று பதிவாகியுள்ளது.
தேசிய தெஹிவளை மிருகக்காட்சிசாலை அன்றைய தினம் 50,80,377 ருபாவை வருமானமாக ஈட்டியுள்ளது.
அதேநேரம், உலக சிறுவர் தினத்தன்று ஏனைய அனைத்து மிருகக்காட்சிசாலைகளும் அதிகூடிய வருமானத்தை ஒரே நாளில் பெற முடிந்ததாக தேசிய விலங்கியல் திணைக்களம் நேற்று (04) கமத்தொழில், வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் அறிவித்துள்ளது.
இதன்படி அன்றைய தினம், பின்னவல யானைகள் சரணாலயம் 9,47,000 ரூபா வருமானத்தையும், பின்னவல மிருகக்காட்சிசாலை ரூ.9,49,200 மற்றும் ரிதியகம சபாரி பார்க் 8,56,000 ரூபாவையும் வருமானமாக ஈட்டியுள்ளது.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, தேசிய விலங்கியல் திணைக்களம், சிறுவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை இலவசமாக மிருகக்காட்சிசாலைக்குள் நுழைய அனுமதித்துள்ள போதிலும், அதிக வருமானம் கிடைப்பது இதுவே முதல் தடவை என்று தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திலக்பிரேம காந்த தெரிவித்துள்ளார்.