இமாச்சல் பிரதேசத்தில் ரூ.3,650 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி. கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட உள்நாட்டு மொபைல் போன்கள் நாட்டின் ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைந்ததாக பேச்சு.
பிரதமர் நரேந்திர மோடி இன்று இமாச்சல் பயணம் மேற்கொண்ட நிலையில் காலை எய்ம்ஸ் மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து லுஹ்னூ மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் தேசிய நெடுஞ்சாலை திட்டம், மருத்துவ சாதன பூங்கா உள்ளிட்ட ரூ.3650 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதனைத்தொடர்ந்து திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், தசரா திருவிழாவான இன்று நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் சிறப்பான கல்வி கிடைக்க இறைவனை வேண்டுவதாக குறிப்பிட்டார். வளர்ச்சியின் பயன்கள் நாட்டில் உள்ள தொலைதூர பகுதிகளுக்கும் சென்றடைவதை உறுதி செய்ய கடந்த எட்டு ஆண்டுகளாக தாங்கள் பணியாற்றி இருப்பதாக தெரிவித்த பிரதமர், பல வளர்ச்சி திட்டங்கள் குறித்த காலத்தில் நிறைவேற்றப்படுவதையும் உறுதி செய்திருப்பதாக குறிப்பிட்டார்.
டிஜிட்டல் இணைப்பில் இந்தியாவின் வளர்ச்சியை நாம் அனைவரும் கண்டு கொண்டிருக்கிறோம். மிகச் சிறப்பான 4ஜி இணைப்புடன் கூடிய இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிகக் குறைவான மொபைல் போன்கள் நமது தகவல் தொடர்பை அதிகரித்துள்ளதோடு மட்டுமல்லாமல், கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட உள்நாட்டு மொபைல் போன்கள் இந்தியாவின் ஒவ்வொரு கிராமங்களையும் சென்றடைந்து இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து மத்தியிலும்-மாநிலத்திலும் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க மக்கள் வாக்களித்துள்ளதால் இமாச்சல் பிரதேசத்தில் வளர்ச்சி சாத்தியமாகி இருக்கிறது என்றார். அதே நேரத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டில் இமாச்சலில் மூன்று மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. தற்போது 8 மருத்துவக்கல்லூரிகள் மற்றும் எய்ம்ஸ் ஆகியவை கடந்த எட்டு ஆண்டுகளில் அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ட்ரோன் கொள்கையை வகுத்த நாட்டிலேயே முதல் மாநிலமாக இமாச்சல் பிரதேசம் உருவானதற்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.
இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தசரா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். இமாச்சல் பிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் அரசியல் ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM