புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று போட்டி வேட்பாளர் சசிதரூர் கூறினார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் இடையே போட்டி நிலவுகிறது. வரும் 8ம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும். வேட்பாளர்கள் இருவரும், வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டி உள்ளனர். மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கட்சித் தலைமை மற்றும் பெரும்பாலான தலைவர்கள் ஆதரவு அளித்துள்ளனர். இந்நிலையில் சசி தரூர் அளித்த பேட்டியில், ‘கட்சியின் பெரிய தலைவர்களிடமிருந்து எந்தவித ஆதரவையும் நான் எதிர்பார்க்கவில்லை.
நாக்பூர், ஐதராபாத்தில் உள்ள கட்சித் தொண்டர்களை சந்தித்தேன். அவர்கள்தான் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் என்னை போட்டியிட சொன்னார்கள்; இப்போட்டியில் இருந்து பின்வாங்க வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். இதுவரை எனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன். கேரள காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன், மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது, என்னை ஆதரவு அளிப்பவர்களின் ஊக்கத்தை கெடுக்கலாம். வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. எனவே மக்கள் தங்கள் விருப்பம் மற்றும் நம்பிக்கைகளுக்கு ஏற்ப வேட்பாளர்களுக்கு வாக்களிக்கலாம். கட்சியை யார் வலுப்படுத்த வேண்டும் என்று வாக்காளர்கள் முடிவு எடுப்பார்கள். நான் தேர்தலில் போட்டியிடுவதை ராகுல்காந்தியே ஆதரித்துள்ளார்’ என்றார்.