இந்திய மக்கள் தொகையை கட்டுப்படுத்த புதிய சட்டம் வேண்டும்- ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

இந்தியாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த புதிய சட்டம் இயற்ற வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆர்.எஸ்.எஸ். சார்பில் தசரா விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பிரம்மாண்ட பேரணிகளை நடத்துவார்கள். மற்ற விழாக்களை காட்டிலும் வருடாந்திர விஜயதசமி முக்கியமானதாகப் பார்க்கப்படும். ஏனென்றால் பல முக்கியமான பிரச்சினைகளில் ஆர்.எஸ்.எஸின் நிலைப்பாட்டை ஆர்.எஸ்.எஸ். தலைவர் இந்த நிகழ்வில் வெளிப்படையாக முன்வைப்பார். இந்த நிகழ்ச்சியில் மலையேறும் வீராங்கனையான சந்தோஷ் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆர்.எஸ்.எஸ்.வரலாற்றில் பெண் ஒருவர் சிறப்பு விருத்திரனாகக்கலந்து கொள்வது இதுவே முதல்முறையாகும். ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பேரணி செல்ல அதை, சிறப்பு விருந்தினர் சந்தோஷ் யாதவ் மற்றும் மோகன் பகவத் ஆகியோர் கண்டு ரசித்தனர்.
image
இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசுகையில், சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பும் நம்பகத்தன்மையும் அதிகரித்துள்ளது. பல சர்வதேச பிரச்சினைகளில் நமது நிலைப்பாடு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கொரோனாவுக்கு பின்னர் வெகு விரைவில் நமது பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது. உலகப் பொருளாதார வல்லுநர்கள் பலரும் இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்று கணித்துள்ளனர். விளையாட்டிலும் நமது வீரர்கள் நாட்டைப் பெருமைப்படுத்துகிறார்கள்.
இந்தியாவின் தற்போதைய தேவை மக்கள் தொகை கட்டுப்பாட்டுச் சட்டமும் மதம் சார்ந்த சமமற்ற நிலையைத் தடுத்து கட்டாய மதமாற்றத்தைத் தடுப்பதுமே ஆகும். இவை இரண்டும் அசட்டை செய்யாமல் உடனே கவனிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் மதம் சார்ந்து மக்கள் தொகையில் சமமற்ற நிலை உருவாகினால் அது தெற்கு சூடான், கொசோவோ நாடுகளில் ஏற்பட்ட நிலையை உருவாக்கும். மக்கள் தொகை அதிகரிப்பதற்கு ஏற்ப வளங்களும் தேவை. வளங்களைப் பெருக்கும் நடவடிக்கை எடுக்காமல் மக்கள் தொகை அதிகரிப்பதை அனுமதித்தால் அது சுமையாக மட்டுமே உருவாகும். ஆனால் அதே வேளையில் மக்கள் தொகை மிகப்பெரிய சொத்தாகவும் கருதப்படுகிறது. மக்கள் தொகை கொள்கையை வகுத்தால் தான் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும். மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு பூலோக ரீதியாகவும் எல்லைப் பிரச்னைகளை உருவாக்கும். இவைதவிர கட்டாய மதமாற்றமும், ஊடுருவலும் பெரும் பிரச்னையாக இருக்கிறது என்றார்.
image
தொடர்ந்து அவர் பேசுகையில் ஆங்கிலம் குறித்து இங்கு பல்வேறு கட்டுக்கதைகள் பரப்பப்படுகிறது. நாம் நமது வாழ்க்கையிலும், தொழிலிலும் சிறப்பாக இருக்க ஆங்கில முக்கியம் என்பது கட்டுக்கதை. புதிய கல்விக்கொள்கை மாணவர்களை பண்பட்டவர்கள் ஆகவும், தேசபக்தி கொண்ட நல்ல மனிதர்களாகவும் மாற்ற வழிவகை செய்கிறது. சமூகம் இதை ஆதரிக்க வேண்டும் என தெரிவித்தார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.