உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூரை அடுத்து, இங்கு தான் லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்தி கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுகின்றனர். இந்தாண்டு தசரா திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து காப்பு கட்டி விரதம் தொடங்கிய பக்தர்கள், நேர்த்தி கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து ஊர்தோறும் சென்று காணிக்கை வசூலித்து, அதை நாளை (6ம்தேதி) கோயிலில் செலுத்தி, காப்பை களைந்து தங்கள் விரதத்தை முடிக்கின்றனர்.
வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர். 9ம் நாளான நேற்று (செவ்வாய்) இரவில் அன்ன வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 10ம் திருவிழாவான இன்று (புதன்) காலை 10.30 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் கடற்கரை சிதம்பரரேஸ்வர கோயிலுக்கு முன் எழுந்தருளி மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. நள்ளிரவு 1 மணியளவில் இது நடக்கிறது. இதைத் தொடர்ந்து கடற்கரை மேடையில் அம்மன் எழுந்தருளுகிறார். அங்கு அபிஷேகம் நடக்கிறது. அதிகாலை 2 மணிக்கு சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு முன் எழுந்தருளி, சாந்தாபிஷேக ஆராதனை, 3 மணிக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது.
பின்னர் காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை வீதியுலா புறப்படுதல், மாலை 4 மணிக்கு அம்மன் கோயில் வந்தடைதல், மாலை 4.30 மணிக்கு காப்பு களைதல், நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது. அம்மன் மாலை 4 மணிக்கு கோயிலை வந்தடைந்ததும் கொடியிறக்கப்படும். அதன்பின்னர் பக்தர்கள் காப்பு அவிழ்த்து, வேடம் களைந்து, விரதத்தை நிறைவு செய்வார்கள். நாளை மறுநாள் (7ம்தேதி) மதியம் அம்மனுக்கு சிறப்பு பாலாபிசேகம் நடக்கிறது. இன்று மகிஷா சூரசம்ஹார விழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வேடங்களில் குவிந்து வருகின்றனர். பாதுகாப்பு பணியில் சுமார் 3 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.