காஞ்சிபுரம்: “தமிழக முதல்வர் ஸ்டாலின், ஒருபக்கம் நாங்கள் இந்து மதம் உட்பட எந்த மதத்திற்கும் எதிரி இல்லையென்றும், ஆன்மிகத்துக்கு எதிரானவர்கள் இல்லை என்றும் பேசிவிட்டு, மறுபக்கத்தில் இதற்கு எதிராக பேசுகிறவர்களைக் கண்டிக்காமல் ஊக்கப்படுத்துகிறார்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், முதல்வர் ஸ்டாலின் எந்த மதத்திற்கு திமுக எதிரி இல்லை என்று பேசியிருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “ஆ.ராசாவை கூப்பிட்டு முதல்வர் கண்டித்துள்ளாரா? அவ்வாறு செய்யவில்லையே. அல்லது, அவரை துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கினாரா? எதுவுமே செய்யவில்லையே.
ஒருபக்கம் நாங்கள் இந்து மதம் உட்பட எந்த மதத்திற்கும் எதிரி இல்லையென்று கூறுவது. ஆன்மிகத்துக்கு எதிரானவர்கள் இல்லை என்று கூறுவது. ஆனால், அதே மறுபக்கத்தில் இதுபோல் பேசுகிறவர்களைக் கண்டிக்காமல் ஊக்கப்படுத்துவது.
‘எந்த மதத்தையும் இழிவுபடுத்தினால், நான் விடமாட்டேன், அவர்களை நான் உண்டு, இல்லை என்று செய்துவிடுவேன். அவர்களது பதவியை பறித்துவிடுவேன். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’ என்றெல்லாம் கூறாமல், முதல்வர் பத்திரிகைகளில் செய்தி வரவேண்டும் என்பதற்காக மட்டும் பேசினால் போதுமா? ஆனால், இவையெல்லாம் பசப்பு வார்த்தைகள், ஏமாற்று வார்த்தைகள், மோசடியான வார்த்தைகள் என்று மக்களுக்கு தெரியும்” என்று அவர் கூறியுள்ளார்.