புதுடெல்லி: சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவின் உடல்நிலை ஆபத்தான நிலையிலேயே உள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
82 வயதாகும் முலாயம் சிங் யாதவ், கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி டெல்லி அருகே குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த திங்கள் கிழமை வரை சிசியு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முலாயம் சிங் யாதவ், பின்னர் ஐசியு வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு உயிர் காக்கும் மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மேதாந்தா மருத்துவமனை தெரிவித்துள்ளது.
பல்வேறு நிபுணர்களைக் கொண்ட மருத்துவக் குழு முலாயம் சிங் யாதவுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், அவர் தொடர்ந்து ஆபத்தான நிலையிலேயே இருந்து வருவதாகவும் மருத்துவமனை அறிவித்துள்ளது.
இந்நிலையில், மேதாந்தா மருத்துவமனைக்கு இன்று நேரில் சென்ற ஹரியானா முதல்வர் மனோகர் லால் கத்தார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, முலாயம் சிங் யாதவின் குடும்பத்தினரையும், மகன் அகிலேஷ் யாதவையும் சந்தித்து, முாலயம் சிங் யாதவ் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்ததாகக் குறிப்பிட்டார். மேலும், முலாயம் சிங் யாதவின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், எனினும் முழுமையாக குணமடைய காலம் ஆகும் என்றும் மருத்துவர்கள் கூறியதாக மனோகர் லால் கத்தார் தெரிவித்தார்.