காசியாபாத்: உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் எல்இடி டிவி வெடித்த காரணத்தால் 16 வயது சிறுவன் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் மேலும் இருவர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தீயணைப்பு படையினர் சம்பவம் நடந்த வீட்டில் ஆய்வு செய்துள்ளனர்.
டிவி வெடித்து சிதறுவதற்கான தீப்பற்றி எரியக் கூடிய பொருட்கள் ஏதும் இல்லை என தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இந்த விபத்துக்கு வோல்டேஜ் ஒரு காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இந்த விபத்தால் டிவி வைக்கப்பட்டிருந்த அரை முழுவதும் சேதம் அடைந்துள்ளதாகவும், சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளதாவும் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் போது இரண்டு பேர் இணைந்து டிவி பார்த்துள்ளனர். அப்போது அவர்களின் தாயார் வீட்டு வேலைகளை கவனித்து வந்துள்ளார்.
“நான், எனது கணவர் மற்றும் மகள் என மூவரும் வீட்டின் கீழ் தளத்தில் இருந்தோம். அப்போது திடீரென மேல் தளத்தில் சத்தம் கேட்டது. எனது கணவர் விரைந்து சென்று பார்த்தார். அப்போது டிவி வெடித்தது தெரிந்தது. மூவரும் காயம் அடைந்தனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தோம். அந்த அறை முழுவதுமாக சேதம் அடைந்துள்ளது” என உயிரிழந்த நபரின் உறவினர் மோனிகா தெரிவித்துள்ளார். அந்தச் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் எல்பிஜி சிலிண்டர் தான் வெடித்து விட்டதாக எண்ணியுள்ளனர். பிறகுதான் டிவி வெடித்ததை அறிந்து கொண்டுள்ளனர்.