தேசிய அரசியலில் பங்கேற்பதற்காக தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் தனது தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை பாரத் ராஷ்டிரிய சமிதி என பெயர் மாற்றம் செய்துள்ளார்.
தெலங்கானா முதலமைச்சர் கேசிஆர் சமீப நாட்களாக தேசிய அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ச்சியாக பாஜகவை கடுமையாக எதிர்த்து வரும் அவர், பல்வேறு மாநில கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்க்க பல்வேறு மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதற்கான ஒரு தளமாக புதிய கட்சி தொடங்கவுள்ளதாக அறிவிப்பு ஒன்றை தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி வெளியிட்டது.
பல்வேறு அறிஞர்களிடம் கருத்து கேட்டு புதிய கட்சிக்கான கோட்பாட்டை உருவாக்கி வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்நிலையில் இன்று தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் பெயரை பாரத் ராஷ்டிரிய சமிதி என மாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்தில் சந்திரசேகர் ராவ் விண்ணப்பித்துள்ளார்.
இந்த அறிவிப்பு இன்று வெளியான நிலையில், இதற்கு விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். மேலும் இன்று காலை தெலங்கானா முதலமைச்சர் மாளிகையில் நடைபெற்ற விருந்தில் திருமாவளவன், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
2023ஆம் ஆண்டு கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாரத் ராஷ்டிரிய சமிதி, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் தெலுங்கு மக்கள் அதிகம் வாழும் பகுதிகளை குறிவைத்து களமிறங்கவுள்ளது எனவும் கூறப்படுகிறது.
newstm.in