இலங்கை முதலீட்டுச் சபை உரிய மதிப்பீடுகைள வழங்கத் தவறியமையால் நேற்று (03) அனுமதி கிடைக்கப்பெறாத 2008ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் 2291/25ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்ட கட்டளைக்கு 04.10.2022 கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.
04.10.2022 மு.ப. 9.00 மணிக்கு சகல தகவல்கள் மற்றும் மதிப்பீடுகளுடன் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு முதலீட்டுச் சபைக்கு 03.10.2022 அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா தலைமையில் (04) மு.ப. 9.00 மணிக்கு அரசங்க நிதி பற்றிய குழு கூடியதுடன் முதலீட்டுச் சபை உரிய தகவல்களை முன்வைத்ததன் பின்னர் அது தொடர்பில் கருத்தில் கொண்டு அனுமதி வழங்கப்பட்டது.
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட 2022 ஓகஸ்ட் 03 திகதிய 2291/25ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்ட கட்டளை கடந்த செப்டெம்பர் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
இதன்போது வர்த்தமானி அறிவித்தலுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும் முதலீட்டை மேற்கொள்ளும் நிறுவனத்துக்கு 17 வருடங்களுக்கு வரிச் சலுகை வழங்குவதன் அடிப்படை என்ன என்பதை சரியாக மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் முதலீட்டின் அளவுக்கு வழங்கப்படும் வரிச் சலுகையை தீர்மானிக்கும் முறையான கொள்கையொன்று எதிர்காலத்தில் தயாரிக்கப்பட வேண்டும் எனவும் குழு சுட்டிக்காட்டியது.
அமைச்சர் விதுர விக்ரமநாயக, இராஜாங்க அமைச்சர்களான செஹான் சேமசிங்ஹ, கலாநிதி சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, சந்திம வீரக்கொடி, மயந்த திசாநாயக்க, ஹர்ஷண ராஜகருணா மற்றும் பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோரும் முதலீட்டுச் சபையின் தலைவர் ராஜா எதிரிசூரிய உள்ளிட்ட அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.