குலசேகரம்: பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடத்தப்பட்டு தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை என தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் சுற்றுலா தலங்களுக்கு பெயர்போன கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தவண்ணம் உள்ளனர். இங்குள்ள திற்பரப்பு அருவியில் கடந்த 5 நாட்களாக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மற்ற பகுதிகளை காட்டிலும் திற்பரப்பு பகுதியில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படும். கடந்த 2 நாட்களாக சாரல் மழை அவ்வப்போது பெய்து வருவதால் குளு குளு சீசன் நிலவுகிறது. கோதையாற்றில் மிதமான அளவில் தண்ணீர் செல்வதால் திற்பரப்பு அருவியில் கணிசமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது. இது சுற்றுலா பயணிகளுக்கு அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை முதல் மாலை வரை அருவியில் சுற்றுலா பயணிகள் உல்லாச குளியல் போட்டனர். அதன் அருகில் உள்ள நீச்சல் குளத்திலும் நீராடி மகிழ்ந்தனர். அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் படகு சவாரி செய்து கோதையாற்றின் அடர்ந்த சோலைவன பகுதிகளை காண்பது கண்களுக்கு விருந்தளிக்கும். வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் நீண்ட நேரம் காத்திருந்தே படகு சவாரி செய்ததை பார்க்க முடிந்தது.
உள்ளூர், வெளியூர் என அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
திற்பரப்பு அருகே சாலையின் இரு பக்கங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. பஸ் போன்ற பெரிய வாகனங்கள் உள்ளே செல்ல முடியாததால் திற்பரப்பு சந்திப்பு பகுதியில் பஸ்சை நிறுத்தி விட்டு அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்தே திற்பரப்பு அருவிக்கு செல்ல முடிந்தது.
மக்கள் கூட்டத்தால் திற்பரப்பு பகுதி ஸ்தம்பித்துள்ளது. இதேபோல் பேச்சிப்பாறை அணை மற்றும் மாத்தூர் தொட்டில் பாலத்தை பார்ப்பதற்காகவும் நேற்று சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர். பாலத்தின் நடுப்பகுதிக்கு சென்று இரண்டு மலைகளிடையே பாறைகளில் தவழ்ந்து செல்லும் பரளியாற்றின் இயற்கை அழகை ரசித்ததோடு செல்பி எடுத்துக்கொண்டனர். குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதால் கடந்த 5 நாளாக புதிது புதிதாக தற்காலிக கடைகளும் போடப்பட்டுள்ளன. அங்கு வியாபாரம் களைகட்டுகிறது.