சென்னை: பண்டிகை காலங்களில் சென்னை – புரசைவாக்கம் போக்குவரத்து நெரிசலில் திணறி வருகிறது. குறிப்பாக, சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கடைகள் ஆகியவற்றால் தானா தெருவில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
சென்னையின் முக்கிய வணிக பகுதிகளாக தி.நகர். புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ளது. இந்தப் பகுதிகளில் பண்டிகை காலங்களில் பொது மக்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக மாலை நேரங்களில் இந்தப் பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவு இருக்கும். ஆனால், தி.நகரில் கூட்டத்தை முறைப்படுத்தவும், பொதுமக்களின் வசதிக்காவும் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக, வாகன நிறுத்த வசதி, பாதுகாப்பு பணியில் காவலர்கள், தயார் நிலையில் தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட வசதிகள் அனைத்தும் தி.நகரில் பொதுமக்களின் வசதிக்கு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கு அப்படியே எதிராக எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாமலும், போக்குவரத்து நெரிசல் காரணமாகவும், ஆக்கிரமிப்புகளிலும் சிக்கித் திணறி வருகிறது புரசைவாக்கம். குறிப்பாக, பொதுமக்கள் நடக்கவும், அவரச கால வாகனங்கள் செல்ல கூட வழி இல்லாமல் ஸ்திம்பிக்கும் நிலையில் உள்ளது புரசைவாக்கம்.
புரைவாக்கத்தில் உள்ள தானா தெரு முழுவதும் கடைகள் நிறைந்த தெருவாகும். இந்த தெருவில் வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களை வாங்கும் வகையில் பல்வேறு கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுக்கு முன்பு சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சாலையோர கடைகளால் காலை மற்றும் மாலை வேளைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள பழக்கடைகள், பூக்கடைகளால் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பண்டிகை காலங்களில் புதிதாக பல தற்காலிக கடைகளும் தானா தெருவை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இதன் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. பொருட்கள் வாங்க வருபவர்கள் வாகனங்களை சாலையில் ஓரத்தில் நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். இதன் காரணமாக மாற்ற வாகனங்கள் சீராக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
இதற்கு அடுத்த படியாக முக்கியப் பிரச்சனையாக உள்ளது போக்குவரத்து நெரிசல். பண்டிகை காலம் மட்டுமல்லாமல் சாதாரண நாட்களில் கூட புரசைவாக்கும் போக்குவரத்து நெரிலில் சிக்கித் தவிக்கிறது. புரசைவாக்கம் மேம்பாலத்திலும், அதன் கீழ் பகுதிகளிலும் மாலை நேரங்களில் வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் இருந்து தானா தெருவிற்கு செல்லும் சாலைக்கு வாகனங்கள் திரும்பும்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவரச கால ஊர்திகள் வேகமாக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
புரசைவாக்கத்தில் கடைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தாலும் இங்கு மாநகராட்சி சார்பில் எந்த வித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. தி.நகரில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த பல்வேறு வாகன நிறுத்த வசதிகள் மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டுள்ளது. ஆனால், புரசைவாக்கத்தில் அதுபோன்று எந்த வசதியும் இல்லை. மேலும், பொதுமக்களுக்கு கழிவறை வசதியும் செய்து தரப்படவில்லை. தி.நகரில் பெரும்பாலான கடைகளில் பெரிய கடைகள் என்பதால் அங்கு அந்தக் கடைகளுக்கு உள்ளே அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருக்கும். ஆனால், புரசைவாக்கத்தில் பெரும்பாலான கடைகள் சிறிய கடைகள் என்பதால் இந்தக் கடைகளில் அதுபோன்ற வசதிகள் இல்லை.
பண்டிகை காலங்களில் புரசைவாக்கம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தாலும் பல நேரங்களில் இந்த இடத்தில் போக்குவரத்துக் காவலர்கள் பணியில் இருப்பது இல்லை. இதன் காரணமாக வாகனங்கள் முறையாக செல்லாமல் தங்களின் இஷ்டத்திற்கு செல்கின்றன. மேலும், வாகனஙகள் மேம்பாலத்திலும், கீழ் பகுதியிலும் வரிசை கட்டி நிற்கின்றன.
எனவே, புரசைவாக்கத்தில் பொதுமக்களுக்கு தேவையான வாகன நிறுத்தம், அடிப்படை வசதிகள் ஆகியவற்றை சென்னை மாநகராட்சியும், போக்குவரத்து சீர்படுத்துதல், சாலையோர கடைகள் ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளை காவல் துறையும் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.