சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
காற்றழுத்த தாழ்வுப் பகுதி
மத்திய மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 4 முதல் 7-ம் தேதி வரை ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சூறாவளிக் காற்று
4-ம் தேதி லட்சத்தீவு, குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும்.
வடக்கு ஆந்திர கட லோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.