சென்னை: இரண்டு நாள் தசரா விடுமுறைக்கு பிறகு, கர்நாடக மாநிலத்தில் இருந்து ராகுல்காந்தி மீண்டும் பாதயாத்திரையை தொடங்கினார். அவருடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியும் இணைந்து நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
நாட்டு மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தி, குமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள் பாரத் ஜோடா யாத்திரை மேற்கொள்ளும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7ந்தேதி மாலை தனது யாத்திரையை தொடங்கினார். இந்த யாத்திரையானது, 12மாநிலங்கள் , 5 யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கி ஏறக்குறைய 3500 கி.மீ தூரத்தை கடக்கிறது. இந்த பாத யாத்திரையானது 150 நாளில் நிறைவடையும் வகையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.
ஏற்கனவே தமிழ்நாடு, கேரளாவை கடந்து தற்போது கர்நாடக மாநிலத்தில் அவரது நடை பயணம் நடைபெற்று வருகிறது. தசரா பண்டிகை மற்றும் விஜயதசமியையொட்டி 2 நாள் ஓய்வெடுத்த ராகுல்காந்தி, இன்று கர்நாடக மாநிலத்தில் தனது 5-வது நாள் பயணத்தை தொடங்கினார். இன்றைய யாத்திரையின்போது, அவரது தாயாரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவருமான சோனியாகாந்தியும் இணைந்து, நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவர்களுடன் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு சோனியா காந்தி பொதுநிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.