பிரசாந்த் கிஷோருக்கு சி.எம் போஸ்ட்… ஆனால் அதுக்கு மட்டும் ‘நோ’- நீங்க கிளம்புங்க நிதிஷ்!

ஒருபுறம் இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி கையிலெடுத்து ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளார். மறுபுறம் ஜன் சூராஜ் யாத்ராவை கையிலெடுத்து பிகார் மாநிலத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளார் பிரசாந்த் கிஷோர். அம்மாநிலத்தில் புதிய அரசியல் சக்தியாக உருவெடுக்க நடைபயணத்தை தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பிகார் மாநிலத்தில் நகரங்கள், கிராமங்கள், தெருக்கள் என 3,500 கிலோமீட்டர் தூரத்தை நடந்தே கடந்து பொதுமக்களை சந்திக்க இருக்கிறார்.

பிரசாந்த் கிஷோர் என்றால் தேர்தல் வியூக நிபுணர் என்று தான் பலருக்கும் நினைவில் தோன்றும். அந்த அளவிற்கு இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் பிராந்திய கட்சிகள் ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்து வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டியுள்ளார். இதில் 2021ஆம் ஆண்டு தமிழகத்தில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசையும் சொல்லலாம்.

இவரது அரசியல் தொடக்கம் என்பது சொந்த மாநிலமான பிகாரில் தான் நடந்தது. அங்குள்ள பிராந்திய கட்சியான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். சிஏஏ விவகாரத்தில் மாறுபட்ட நிலைப்பாடு காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு தேசிய அளவில் புகழ் பெற்றது தனிக்கதை. இந்நிலையில் நேற்று பிரசாந்த் கிஷோர் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பு தான் ஹைலைட்.

அதில் பகிர்ந்த விஷயங்கள் அரசியல் அரங்கில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. அப்படியென்ன பேசியிருக்கிறார் என்று கேட்கலாம். எல்லாம் அவரது சொந்த மாநில அரசியல் தான். பாஜக உடன் மோதல் போக்கு ஏற்பட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியே வந்தார். பின்னர் மகாகத் பந்தன் கூட்டணியில் இணைந்து மீண்டும் பிகார் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

இந்த சூழலில் 10, 15 நாட்களுக்கு முன்னதாக நிதிஷ் குமார் தன்னை அழைத்ததாகவும், ஐக்கிய ஜனதா தளக் கட்சிக்கு தலைமை வகிக்க வருமாறும் அழைப்பு விடுத்தார். ஆனால் முதலமைச்சர் பதவியே கொடுத்தாலும் தான் சேரப் போவதில்லை என்று கூறிவிட்டாராம். மேற்கு சம்புரான் மாவட்டத்தில் உள்ள ஜமுனியா கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் கொண்ட நிலைப்பாட்டில் இருந்து ஒருபோதும் மாற மாட்டேன் என்றும், இதை மக்களுக்கு வாக்குறுதியாக அளிக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரசாந்த் கிஷோரின் யாத்திரைக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சி கேள்வி எழுப்பியிருந்தது. அதுமட்டுமின்றி பின்னணியில் பாஜக தான் மூளையாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியது. இதுபற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்று அரசியல்வாதிகள் என்னிடம் ஆலோசனை பெற்றிருக்கின்றனர்.

தேர்தல் வியூக நிபுணராக என்னுடைய சாதனைகளை பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. பலவாறு பாராட்டியும் இருக்கிறது. ஆனால் எனக்கு பணம் எங்கிருந்து வருகிறது என யாரும் ஒருபோதும் கேட்டதில்லை. நான் நன்கொடை வசூலித்து வருகிறேன். எனது இயக்கத்தை வலுப்படுத்த, ஜனநாயக கட்டமைப்பை மேம்படுத்த மேற்கொண்டுள்ள பயணத்திற்கு கட்டணமாக இதை பெற்று வருவதாக குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.